கொல்கத்தா: ஐபிஎல் கிரிகெட் தொடரின் 31வது லீக் ஆட்டம் நேற்று கொல்கத்தாவில் புகழ் பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. அதில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதனை அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியில் தொடக்க வீரர்களாக ஃபில் சால்ட் மற்றும் சுனில் நரேன் களம் இறங்கினர். கடந்த போட்டியில் அணிக்காக சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்திய ஃபில் சால்ட் 10 ரன்களை மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார்.
அதன் பின்னர் களமிறங்கிய ரகுவன்ஷி, நிதானமாக ஆடி ரன் சேர்த்தார். மறுமுனையில், சுனில் நரேன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் வேகமாக அதிகரித்து, 10 ஓவர் முடிவதற்குள் 106 ரன்களை கடந்திருந்தது. அதன் பின்னர், 30 ரன்களை எடுத்திருந்த நிலையில், குல்தீப் சென் பந்து வீச்சில் ரகுவன்ஷி ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.
ஆனால், தொடக்க வீரராக களமிறங்கி சுனில் நரேன் 56 பந்துகளில், 6 சிக்சர்கள், 13 ஃபோர்கள் என மொத்தம் 109 ரன்களை குவித்தார். இறுதியாக களமிறங்கிய ரிங்கு சிங்கும் தனது பங்கிற்கு 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் முடிவில் கொல்கத்தா அணி 223 ரன்களை குவித்திருந்தது.
வெற்றிக்கு வழிவகுத்த பட்லர்: அதனைத் தொடர்ந்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கியது ராஜஸ்தான் அணி. தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 12 ரன்களிலும், ரியான் பராக் 34 ரன்களிலும், துருவ் ஜூரேல் 2 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஆனால் மறுமுனையில், இம்பாக்ட் விதிப்படி களமிறங்கிருந்த ஜோஸ் பட்லர் உறுதியான ஆட்டத்தை வெளிபடுத்தி கொண்டிருந்தார். தனக்கு சாதகமாக கிடைக்கும் பந்துகளை பவுண்டரிகளாக மாற்றிக் கொண்டிருந்த பட்லரின் பேட்டிங் ராஜஸ்தான் அணிக்கு நம்பிக்கை அளித்தது. அதனைத் தொடர்ந்து கடைசி 2 ஓவர்களில் 28 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ராஜஸ்தான் அணி இருந்தது.
ஹர்ஷித் ராணா வீசிய 19வது ஓவரில் ஜோஸ் பட்லர் இரண்டு சிக்சர்களை விளாசியதோடு, அந்த ஓவரில் 19 ரன்னை திரட்டினார். பின்னர் கடைசி ஓவரின் போது, ராஜஸ்தான் அணி வெற்றி பெற 6 பந்துகளில் 9 ரன் தேவை என்ற நிலையில், அந்த ஓவரை வருண் சக்ரவர்த்தி வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை சிக்கஸர் அடித்த பட்லர் ஐபிஎல் போட்டிகளில் தனது 7-ஆவது சதத்தை பதிவு செய்தார்.இது ஜோஸ் பட்லர் நடப்பு சீசனில் அடித்த இரண்டாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த 3 பந்துகளில் பட்லர் ரன்கள் ஏதும் அடிக்காததால் ராஜஸ்தான் அணி ரசிகர்கள் தங்களது இருக்கையின் நுனியில் அமர்ந்தனர். பின்னர் அடுத்த பந்தில் இரு ரன்கள் எடுத்த நிலையில், கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், மாபெரும் த்ரில் வெற்றியை பதிவு செய்ததது ராஜஸ்தான் அணி.
இதையும் படிங்க: பெங்களூரு அணியை விற்பனை செய்ய திட்டம்? மகேஷ் பூபதியின் பதிவால் பரபரப்பு! என்ன நடந்தது?