லண்டன்: இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் விறுவிறுப்பாக கடந்த 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் அபார சதத்தின் உதவியுடன் 427 ரன்களை குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி வெறும் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வெளியேறியது.
இதனால் 231 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. ஏற்கனவே முன்னிலையில் இருப்பதால் இங்கிலாந்து அணி வீரர்கள் விரைவாக ரன்கள் சேர்க்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தனர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 103 ரன்கள் விளாசினார். ஏற்கனவே முதல் இன்னிங்சில் ஜோ ரூட் 143 ரன்கள் குவித்து இருந்தார். ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஜோ ரூட் சதம் விளாசி சாதனை படைத்தார்.
𝗧𝗵𝗲 moment.
— England Cricket (@englandcricket) August 31, 2024
Joe Root goes above Sir Alastair Cook to score the most Test hundreds for England 🐐 pic.twitter.com/cD5aCXl1Id
மேலும், இது அவருக்கு 34வது சதமாகும். இதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் ஜோ ரூட் படைத்தார். இதற்கு முன் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அலஸ்டையர் குக் அதிக சதங்களை விளாசி இருந்தார். தற்போது அலஸ்டையர் குக்கின் சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர், ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய வீரர் என்ற பல்வேறு சாதனைகளுக்கு ஜோ ரூட் சொந்தக்காரர் ஆனார். அதேபோல் லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு டெஸ்டின் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய 4வது வீரர், அதிகபட்சமாக 7 சதங்கள் விளாசிய வீரர் என்ற பெருமையையும் ஜோ ரூட் பெற்றார்.
A Test match to remember for Joe Root ❤️ pic.twitter.com/LeqN7bXT3p
— England Cricket (@englandcricket) August 31, 2024
அது மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் ஜோ ரூட் அடிக்கும் 50வது சதம் இதுவாகும். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளினார் ஜோ ரூட். ரோகித் சர்மா ஒட்டுமொத்தமாக 48 சதங்கள் விளாசிய நிலையில் ஜோ ரூட் 50 சதங்களை கடந்தார்.
அதேபோல் இலங்கை அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு ஜோ ரூட் முன்னேறினார். ஜோ ரூட்டின் அசத்தல் ஆட்டத்தின் மூலம் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு 483 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: சென்னை பார்முலா 4 கார் பந்தயம்: இரண்டாம் நாள் போட்டிகள் முழு அட்டவணை! - Chennai Formula 4 Race