பாரீஸ்: இத்தாலியை சேர்ந்த துடுப்பு படகு போட்டி வீரரிடம் ஒழுங்கு விதிகளை மீறியதாக கூறி பாரீஸ் பாராலிம்பிக் நிர்வாகம் வெண்கலப் பதக்கம் பறித்து உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்.1) நடைபெற்ற ஆடவருக்கான PR1 ஸ்கல்ஸ் துடுப்பு படகு இறுதிப் போட்டியில் இத்தாலியை சேர்ந்த ஜியாகோமோ பெரினி (Giacomo Perini) என்பவர் கலந்து கொண்டார்.
போட்டியின் முடிவில் ஜியாகோமா மூன்றாவதாக வந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இந்நிலையில், அவர் போட்டியின் போது தன்னுடன் செல்போனை எடுத்துச் சென்றது தெரியவந்தது. பாராலிம்பிக்ஸ் போட்டி விதிகளின் படி வீரர் ஒருவர் போட்டியின் போது குழுவினருடன் எந்தவொரு எலக்ட்ரானிக் கருவியின் மூலமும் தொடர்பு கொள்ளக் கூடாது என்பது விதி எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜியாகோமா விதிகளை மீறியதாக அவருக்கு வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது. இதற்கு ஜியாகோமா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தான் தவறுதலாக செல்போன் எடுத்துச் சென்றதாகவும், போட்டியின் போது யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறினார்.
மேலும், போட்டியின் போது எலக்ட்ரானிக் கருவிகளை பயன்படுத்தி குழுவினருடன் தான் பேசக் கூடாது என்று விதி உள்ளதே தவிர, எலக்ட்ரானிக் சாதனத்தை தன்னுடன் எடுத்துச் செல்லக் கூடாது என விதிமுறைகள் இல்லை என ஜியாகோமா தெரிவித்துள்ளார். மேலும், தன்னிடம் இருந்து கைப்பற்ற செல்போனில் கடைசியாக முதல் நாள் இரவு செல்போன் பேசியதற்கான ஆதராங்கள் மட்டுமே உள்ளதாகவும் அதற்கு பின் யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இத்தாலி துடுப்பு படகு கூட்டமைப்பு முறையிட்ட நிலையில், அது நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து சர்வதேச துடுப்பு படகு இயக்குநர்கள் வாரியத்தில் இது தொடர்பாக முறையிடப் போவதாக இத்தாலி துடுப்பு படகு போட்டி கூட்டமைப்பு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
ஜியாகோமாவிடம் இருந்து வெண்கலம் பறிக்கப்பட்டதை அடுத்து அதே போட்டியில் 4வது இடம் பிடித்த ஆஸ்திரேலிய வீரர் எரிக் ஹார்ரி (Erik Horrie) என்பவருக்கு பதக்கம் வழங்கப்பட்டது. பிரிட்டனை சேர்ந்த பெஞ்சமின் பிர்ட்சார்ட் தங்கமும், உக்ரைன் வீரர் ரோமன் பொலியன்ஸ்கை வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இங்கிலாந்து புது மைல்கல்! இந்தியா பின்னடைவு! - World Test Championship 2024