அகமதாபாத்: 17வது ஐபிஎல் தொடரின் 59வது லீக் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர் கொண்டது. குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன் படி முதலில் களமிறங்கியது குஜராத் அணி. சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் ஜோடி சேர்ந்து சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் துவம்சம் செய்தனர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி இருவரும் சதம் விளாசினார், மேலும் முதல் விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் சேர்த்தனர்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது குஜராத் டைட்டன்ஸ். இதனையடுத்து 232 ரன்கள் எடுத்த வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்தி இருந்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரச்சின் ரவீந்திரா மற்றும் ரகானே தலா 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இதனால் 10 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது சென்னை . இதன் பின்னர் ஜோடி சேர்ந்த டேரில் மிட்செல் - மொயீன் அலி ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடினர். இதில் 27 பந்துகளில் அரைசதம் விளாசிய டேரில் மிட்செல் 63 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து மறுமுனையில் அரைசதம் விளாசிய மொயீன் அலி 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே சிறிது நேரம் அதிரடியாக விளையாடிய நிலையில் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.அவரை தொடர்ந்து ஜடேஜாவும் 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதியில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்ட எம்.எஸ்.தோனி 26 ரன்கள் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குஜராத் அணி. இந்த வெற்றி மூலம் பிளே ஆஃப் ரோஸில் தொடர்ந்து நீடிக்கிறது குஜராத்.
இதையும் படிங்க: சிஎஸ்கே உடனான போட்டியில் என்னுடைய சவால் இதுதான்.. அஸ்வின் கூறியது என்ன?