ஜெய்பூர்: நடப்பு ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி - ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன் படி ராஜஸ்தான் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ஜெய்ஸ்வால்- பட்லர் ஜோடி களமிறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 5 ரன்களுக்கு வெளியேற அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களுக்கு வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் 11 ரன்கள் அடித்து இருந்த போது குல்தீப் யாதவ் வீசிய பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். இதனால், 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ராஜஸ்தான் அணி. இதனையடுத்து களமிறங்கிய ரியான் பராக் - அஷ்வினுடன் கைகோர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில், அதிரடியாக விளையாடிய அஷ்வின் 29 ரன்களுக்கு வெளியேறினார். மறுபுறம் பொறுப்பான ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்திய ரியான் பராக், டெல்லி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். 45 பந்துகளை எதிர்கொண்ட அவர் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உட்பட 85 ரன்கள் குவித்தார். இதன் மூலம் நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்தது ராஜஸ்தான்.
பின்னர் 186 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல் அணியின் ஓப்பணங் பேட்ஸ்மேன்களான டேவிட் வார்னர்- மிட்செல் மார்ஷ் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் மிட்செல் மார்ஷ் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து இருந்தநிலையில் அவுட்டானர்.
இதனையடுத்து களமிறங்கிய ரிக்கி பூய் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர், கேப்டன் ரிஷப் பண்ட்டுடன் கைகோர்த்த வார்னர், 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்தனர். இதில் சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் அரைசதம் அடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ரிஷப் பண்ட் 28 ரன், அபிஷேக் போரல் 9 ரன்களுக்கு வெளியேறினர். பின்னர், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அக்சர் படேல் ஜோடி இணைந்து 51 ரன்கள் சேர்த்தனர். இருப்பினும், ராஜஸ்தான் அணியின் கட்டுக்கோப்பான பந்து வீச்சல் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன் காரணமாக, 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி தரப்பில் சாஹல் மற்றும் பர்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினர். நடப்பு ஐபிஎல் தொடரின் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறும் 10வது லீக் போட்டியில் ராயல் சேலன்சர்ஸ் பெங்களூரு அணி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க: CSK VS GT: ரச்சின்- துபே அதிரடி..குஜராத்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே! - IPL 2024 CSK VS GT