பெங்களூரு: 17வது ஐபிஎல் தொடரின் 15வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு இந்த போட்டியானது தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 181 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அதிரடியாக விளையாடிய ஓப்பனிங் பேட்ஸ்மேனான குவிண்டன் டிகாக் 81 ரன்கள் குவித்தார். இறுதியில் அதிரடி காட்டிய நிக்கோலஸ் பூரன் 40 ரன்களையும் குவித்திருந்தனர்.
பெங்களூரு அணி பந்து வீச்சாளர்கள் தரப்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளையும், ரீசே டோப்லி, யாஷ் தயாள், முகமது சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பெங்களூரு அணி.
ஓவருக்கு 10 ரன் என்ற கணக்கில் ஆடிக்கொண்டு இருந்த பெங்களூரு அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக போட்டியின் 4.2 ஓவரில் விராட் கோலி ஆட்டமிழந்தார். அவரின் விக்கெட்டை கடந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய தமிழ்நாடு வீரர் மணிமாறன் சித்தார்த் வீழ்த்தினார்.
அதற்கு அடுத்த ஓவரில் டு பிளசிஸ் ரன் அவுட்டானார். இதனையடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் வந்த வேகத்தில் மயங்க் யாதவ் வீசிய பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய கேமரூன் கிரீன்(9), அனுஜ் ராவத்(11) மஹிபால் லோம்ரோர்(33) என அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆர்சிபி.
இதனால் 19.4 ஓவர்களில் 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லக்னோ அணி தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இதனால் 28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும். அதே போல் நடப்பு தொடரில் பெங்களூரு அணி 3வது தோல்வியை சந்திந்துள்ளது. இன்று(புதன்கிழமை) நடைபெறும் 16வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேபிடல்ஸை எதிர் கொள்கிறது.
இதையும் படிங்க: விசாகப்பட்டினத்தை அதிரவிட்ட வின்டேஜ் தோனி.. டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை! - MS Dhoni Achiement