சென்னை: 17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 21வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது.
லக்னோவில் அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுகிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 58 ரன்கள், கே.எல்.ராகுல் 32 ரன்கள் எனக் குவித்தனர். குஜராத் அணியில் உமேஷ் யாதவ் மற்றும் தர்ஷன் நல்காண்டே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இதனையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மன்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட் இழப்பிற்க்கு 54 ரன்கள் சேர்த்தனர்.
இதில் 19 ரன்கள் எடுத்து இருந்த சுப்மன் கில், யஷ் தாகூர் வீசிய பந்தில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து 'இம்பேக்ட் பிளேயராக' களமிறங்கிய வில்லியம்சன் 1 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாய் சுதர்சன் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய ஷரத் (2), தர்ஷன் நல்கண்டே (12) ரன், விஜய் சங்கர் (17) ரன்களும், ரஷித் கான் (0) ரன் ஏதும் எடுக்காமலும், உமேஷ் யாதவ் 2 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர். கடைசி வரை ஒன்மேன் ஆர்மியாக போராடிய ராகுல் திவாட்டியா 30 ரன்களுக்கு ஆட்டமிழக்க குஜராத் அணியின் மொத்த நம்பிக்கை போய்விட்டது.
இதனால், 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். இந்த போட்டியில் அபாரமாக பந்து வீசிய யஷ் தாகூர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதுவரை 4 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் எதிர்கொண்டு உள்ளனர். இந்த 4 போட்டிகளில் குஜராத் அணியே வெற்றி பெற்று இருந்த நிலையில், நேற்று நடைபெற்ற 5வது போட்டியில் குஜராத் அணியை முதன் முறையாக வீழ்த்தி இருக்கிறது, லக்னோ அணி. இன்று (திங்கள்கிழமை) இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும், 22வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க: MI vs DC: நடப்பு சீசனில் முதல் வெற்றி! சொந்த மண்ணில் வெற்றி வாகை சூடிய மும்பை! - IPL 2024