சார்ஜா: ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை துபாயில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் குரூப் ஏ மற்றும் பி என 10 அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடைபெற்று வருகிறது.
லீக் சுற்றின் முடிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய - ஆஸ்திரேலியா அணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
152 இலக்கு: அதன் படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 40 ரன்களும், கேப்டன் தஹ்லியா மெக்ராத் மற்றும் எல்லிஸ் பெர்ரி ஆகியோர் 32 ரன்களும் விளாசி உள்ளனர்.
இந்திய அணி தரப்பில் ரேணுகா மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பூஜா வஸ்திரகர், ராதா மற்றும் ஸ்ரேயங்கா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகின்றது.
இதையும் படிங்க: டி20 கிரிக்கெட்டில் 297 ரன் குவிப்பு; வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றி!
கட்டாய வெற்றி: 3 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய மகளிர் அணி, நியூசிலாந்து அணியிடம் தோல்வியைத் தழுவியது. ஆனால் அதற்கு அடுத்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுடன் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன், குரூப் ஏ பிரிவில் 2வது இடத்தில் உள்ளது.
இந்த போட்டியில் நல்ல ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி அரையிறுதி சுற்றுக்குள் சுலபமாக நுழையு முடியும். அதே போல் நியூசிலாந்து அணியும் 4 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. அந்த அணியும் அரையிறுதி செல்ல வேண்டும் என கடுமையாகப் போராடி வருகிறது. இதனால் இந்த போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.