பல்லகெலே: இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரிலிருந்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்படவுள்ளார். மேலும், இந்திய டி20 அணியை சூர்யகுமார் யாதவ் தலைமை தாங்குகிறார். துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த தொடருக்கான முதல் டி20 போட்டி இன்று பல்லகெலேவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் அசலன்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணிக்கு யாஜஷ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஜோடி துவக்கம் தந்தனர்.
ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் 16 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உட்பட 34 ரன்கள் குவித்த நிலையில், மதுஷனகா பந்தில் ஆட்டமிழந்தார். அதன் அடுத்த ஓவரிலேயே மற்றொரு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர் உட்பட 40 ரன்கள் அடித்து ஹசரங்கா பந்தில் வீழ்ந்தார்.
இதன் மூலம் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதற்கு அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை காட்ட ஆரம்பித்தார். அவர் சந்தித்த 26 பந்துகளிலேயே 58 ரன்கள் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் பத்திரனா வேகத்தில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் 49 ரன்கள் எடுத்த நிலையில் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக் ஆகியோர் வரிசையாக பத்திரனா பந்தில் வெளியேறினர். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. இலங்கை அணியின் பந்துவீச்சைப் பொறுத்தமட்டில், மதீஷா பத்திரனா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: முதல் பதக்கம் வெல்லும் முனைப்பில் இந்தியா.. மனு பாக்கர் இறுதிச்சுற்றுக்கு தகுதி!