நியூயார்க்: டி20 உலகக்கோப்பை (T20 WORLD CUP) தொடர் கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 8வது லீக் போட்டியில் குருப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா அணி - அயர்லாந்து அணியை (IND VS IRE) எதிர்கொண்டது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நாசோ கவுன்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி. தொடக்க வீரர்களாக ஆண்ட்ரு பால்பிரினி மற்றும் கேப்டன் பவுல் ஸ்டிரிலிங் களம் இறங்கினர்.
இதில், ஆண்ட்ரு 5 ரன்னிலும், பவுல் 2 ரன்னிலும் வெளியேற 3 ஆவதாக களம் இறங்கிய விக்கெட் கீப்பர் லோர்கன் டக்கர் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய டெலானி 14 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகள் உள்பட 26 ரன்கள் விளாசினார். மற்ற எந்த பேட்ஸ்மேனும் பெரியதாக சோபிக்கவில்லை. இதனால், 16 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது அயர்லாந்து அணி.
இந்திய அணி தரப்பில், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்களும், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்களும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்களும் வீழ்த்தி இருந்தனர். முகமது சிராஜ் மற்றும் அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி.
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் 5 பந்துகளை எதிர் கொண்ட விராட் கோலி 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய ரிஷப் பண்ட் - ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இதில் அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 37 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் என 52 ரன்கள் விளாசி இருந்த நிலையில் 'ரிட்டயர்ட் ஹர்ட்' முறையில் வெளியேறினார். அதன் பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக 50 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்தார் ரிஷப் பண்ட். மேலும், இந்திய அணி வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) பாகிஸ்தானை அணியை எதிர்கொள்ளவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: 2024 டி20 உலக கோப்பையை வெல்லுமா இந்தியா? முந்தைய தொடர்கள் கூறும் சங்கதி என்ன?