ஐதராபாத்: 2025 - 27 ஐபிஎல் சீசன்களுக்கான திருத்தப்பட்ட விதிமுறை பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த சீசனில் ஒவ்வொரு அணியும் தலா 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும். அதேநேரம் கடந்த 2018ஆம் ஆண்டுக்கு பின்னர் ரைட் டூ மேட்ச் என்ப்படும் ஆர்டிஎம் விதி மீண்டும் கொண்டு வரப்பட்டு உள்ளது.
ஆர்டிஎம் விதி உள்பட ஒவ்வொரு அணியும் அடுத்த சீசனில் 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும். பிசிசிஐ விதிமுறைகளின் படி ஒரு தக்கவைக்கும் முதல் மூன்று வீரர்களுக்கு முறையே 18 கோடி, 14 கோடி மற்றும் 11 கோடி ரூபாய் ஊதியமாக வழங்க வேண்டும். முந்தைய சீசன் ஏலத் தொகை 20 கோடி ரூபாயுடன் சேர்த்து மொத்தம் ஒரு அணிக்கு 120 கோடி ரூபாய் பட்ஜெட்டாகும்.
இதில் ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும் 5 வீரர்களுக்கு ஊதியம் ஒதுக்கி மீதம் 45 கோடி ரூபாயுடன் ஏலத்தில் கலந்து கொள்ளும். இதில் அன்கேப்டு பிளேயேராக அதிகபட்சம் இரண்டு வீரர்களை ஒரு அணி தக்கவைக்க அனுமதிக்கப்படுகிறது. அன்கேப்டு பிளேயருக்கு அதிகபட்சம் 4 கோடி ரூபாய் வரை ஊதியம் வழங்க பிசிசிஐ விதிமுறை கூறுகிறது.
அன்கேப்டு பிளேயர் என்றால் என்ன?
2008ஆம் ஆண்டு ஐபிஎலில் கொண்டு வந்த விதிமுறையில் ஒரு வீரர் தொடர்ந்து 5 ஆண்டுகள் தேசிய அணிக்காக விளையாடாத பட்சத்தில் அவரை அன்கேப்டு பிளேயராக தக்கவைத்துக் கொள்ளலாம். கடைசியாக 2018ஆம் ஆண்டு இந்த விதிமுறை அமலில் இருந்தது. அதன் பின் ஏறத்தாழ 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை அணியில் தோனியை தக்கவைக்க ஏதுவாக அந்த அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே இந்த விதிமுறை மீண்டும் அமலுக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விதியின் கீழ் எம் எஸ் தோனி, வெஸ்ட் இண்டீஸ் வீரர் சுனில் நரேன், வேகப்பந்து வீச்சாளர் மொகித் சர்மா உள்ளிட்டோர் தக்கவைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
தோனியின் சம்பளம் என்ன?
சென்னை அணியில் இரண்டாவது அதிகபட்ச ஊதியம் வாங்கும் நபராக தோனி (ரூ.12 கோடி) உள்ளார். முதல் இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.18 கோடி) உள்ளார். இந்நிலையில், அன்கேப்டு பிளேயராக தோனி தக்கவைக்கப்படும் நிலையில் அவருக்கு ஊதியமாக ஐபிஎல் விதிகளின் படி ரூ.4 கோடி வரை மட்டுமே கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது முதல் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் தோனி, தனது வருங்கால் முடிவு குறித்து இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை. நடப்பு ஐபிஎல் சீசனில் அவர் விளையாடுவாரா அல்லது வேறெதும் முடிவுகள் வெளிவருமா என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 50 பார்ட்னர்ஷிப்! இங்கிலாந்தை முந்திய இந்திய ஜோடி! - Fastest 50 runs in test cricket