ஐதராபாத்: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த ஜூலை மாதம் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. டி20 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக அமைந்தாலும், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் படுதோல்வியை சந்தித்தது இந்திய அணி.
அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. இந்நிலையில், கவுதம் கம்பீரின் ஆல் டைம் பேவரைட் இந்திய லெவன் அணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு வீரர்களும் தங்களுக்கு பிடித்த வீரர்களை வைத்து கனவு அணி அறிவிப்பது சகஜம் தான்.
ஆனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கவுதம் கம்பீர் வெளியிட்டுள்ள கனவு அணியில் இரண்டு பெரிய வீரர்கள் இல்லாதது ரசிகர்களிடையே வியப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தன்னுடைய அணியில் தன்னையும் இணைத்து உள்ள கம்பீர், தன்னுடன் தொடக்க வீரராக விரேந்தர் சேவாக்கை சேர்த்து உள்ளார்.
Gautam Gambhir's all time Indian ODI XI (Sportskeeda):
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 1, 2024
Gambhir, Sehwag, Dravid, Tendulkar, Kohli, Yuvraj, Dhoni, Kumble, Ashwin, Irfan and Zaheer. pic.twitter.com/k6g5hu194r
3வது இடத்தில் முன்னாள் வீரரும், தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டை கம்பீர் இணைத்துள்ளார். நான்காவது இடத்தில் சச்சின் தெண்டுல்கரும், அடுத்தடுத்த இடங்களில் விராட் கோலி, யுவராஜ் சிங் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். பந்துவீச்சாளர்களில் 8வது இடத்தில் அணில் கும்பிளேவும், 9வது இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினும் உள்ளனர்.
வேகப்பந்து வீச்சாளர்களில் இர்பான் பதான் மற்றும் ஜாகீர் கான் ஆகியோர் முறையே 10 மற்றும் 11வது இடம் பிடித்துள்ளனர். அதேநேரம் கவுதம் கம்பீரின் கனவு அணியில் கேப்டன் பதவி யாருக்கும் வழங்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், கம்பீரின் கனவு அணியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இல்லாததும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், இந்திய அணியின் கோகினூர் என்று அழைக்கப்படும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவும் அணியில் இடம் பெறவில்லை. கம்பீரின் கனவு அணியில் ரோகித் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் யாரும் இடம் பெறாதது ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
கம்பீரின் ஆல்-டைம் லெவன்: வீரேந்திர சேவாக், கவுதம் கம்பீர், ராகுல் டிராவிட், சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி, யுவராஜ் சிங், எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), அனில் கும்பிளே, ரவிச்சந்திரன் அஸ்வின், இர்பான் பதான், ஜாகீர் கான்.
இதையும் படிங்க: சென்னையில் சிறப்பாக நடந்து முடிந்த ஃபார்முலா 4 கார் பந்தயம்: அமைச்சர் உதயநிதி பெருமிதம்! - Udhayanidhi Stalin