ஐதராபாத்: குஜராத் மாநிலத்தின் உள்ள ஜாம்நகர் பேரரசின் அடுத்த மன்னராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜெய் ஜடேஜா அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக நவாநகர் மகாராஜா ஜாம் சாஹேப் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக ஜாம்நகர் அரசர் சத்ருசல்யாசின்ஜி திக்விஜய்சின்ஹ்ஜி ஜடேஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், அஜெய் ஜடேஜா தனது வாரிசாக இருக்க ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சத்ருசல்யாசின்ஜி திக்விஜய்சின்ஹ்ஜி ஜடேஜாவின் சகோதரரின் மகன் தான் கிரிக்கெட் வீரர் அஜெய் ஜடேஜா. கிரிக்கெட் வீரர் அஜெய் ஜடேஜா அரச குடும்பத்தில் பிறந்தவர். அவரது உறவினர்களான கே. ரஞ்சித்சிங்ஜி, மற்றும் கே.எஸ் துலிப்சிங்ஜி ஆகியோரின் நினைவாகத் தான் ரஞ்சிக் கோப்பை மற்றும் துலிப் கோப்பை கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்படுகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் போலந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி தலைநகர் வார்ஷாவில் உள்ள ஜாம் சாஹேப் நவாநகர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில், தற்போது இந்த ஜாம் சாஹேப் நவாநகரின் அடுத்த வாரிசாக அஜெய் ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்காக கடந்த 1992 முதல் 2000 ஆண்டு வரை அஜெய் ஜடேஜா கிரிக்கெட் விளையாடி உள்ளார். மொத்தம் 15 டெஸ்ட் மற்றும் 196 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அஜெய் ஜடேஜா விளையாடி உள்ளார். தனது அசாதாரண பீல்டிங் திறமையின் மூலம் அனைவராலும் நன்கு அறியப்பட்ட அஜெய் ஜடேஜா, பல்வேறு தொடர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி உள்ளார்.
தொடர்ந்து சில பாலிவுட் படங்களில் நடத்து உள்ள அஜெய் ஜடேஜா, சில தொலைக்காட்சி சேனல்களில் வெளியான தொடர்களிலும் பங்கேற்றுள்ளார். 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக அஜெய் ஜடேஜா நியமிக்கப்பட்டது பேசு பொருளாக மாறியது.
கிரிக்கெட் தவிர்த்து அஜெய் ஜடேஜாவின் குடும்பம் அரசியலிலும் கொடி கட்டி பறந்தது குறிப்பிடத்தக்கது. அவரது தந்தை தௌலத்சிங்ஜி ஜடேஜா மூன்று முறை ஜாம்நகர் மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: ரூ.27 லட்சம் சம்பளம், 50 நாட்கள் விடுமுறை! ரொனால்டோ ஹோட்டலில் காத்திருக்கும் வேலை! Rs.27 Lakh Salary in Ronaldo Hotel