சென்னை: கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்று வரும் டாடா ஐபிஎல் 2024 (Tata IPL 2024) தொடரின் இறுதிப் போட்டி சென்னையில் நாளை (மே26) நடைபெறுகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன. நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 2 போட்டியில் ஐதராபாத் அணி ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஆனால் நேற்றைய போட்டிக்கு முன்னதாகவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐதராபாத் அணியும் , கொல்கத்தா அணியும் இறுதிப் போட்டியில் மோத உள்ளது போன்று பேனர் வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் புகைப்படத்துடன் கூடிய பேனரை குறிப்பிட்டு, mykhel என்ற இணைய தளம் செய்தி வெளியிட்டிருந்தது.
இதே போன்று தமிழ்நாட்டில் இயங்கக் கூடிய நியூஸ்7 இணையதளத்திலும் இந்த செய்தியை பார்க்க முடிந்தது. "குவாலிபயர் முடியும் முன்பே சன்ரைசர்ஸ் வெற்றி பெற்று, கொல்கத்தாவும், ஹைதராபாத் அணியும் களம் காண்பது போல வைக்கப்பட்டுள்ள இந்த பேனர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது" என நியூஸ்7 இணையதளத்தில் உள்ள செய்தி குறிப்பிடுகிறது.
இதே தொனியில் ஏசியா நெட் தமிழ் இணையதளமும் செய்தி வெளியிட்டுள்ளது.
விசாரணை: இந்த செய்திகளின் உண்மைத் தன்மையை அறிவதற்காக ஈடிவி பாரத் செய்தியாளர் சாலமன் சேப்பாக்கம் மைதானத்திற்கு நேரில் சென்றார். அப்போது விளக்கம் அளித்த மைதான அதிகாரிகள் பிளே ஆஃப்-க்கு முன்னேறிய 4 அணிகளின் கேப்டன்களின் புகைப்படங்களும் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறினர்.
இதே போன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளின் கேப்டன்களான டூப்ளசிஸ், சஞ்சு சாம்சன் ஆகியோரின் புகைப்படங்களுடன் கூடிய பேனரையும் செய்தியாளர் சாலமன் புகைப்படம் எடுத்துள்ளார். இறுதிப்போட்டிக்கான ஏற்பாடுகள் 1 வாரத்திற்கு முன்னதாகவே நடைபெற்றதாக கூறிய மைதான அதிகாரிகள், யார் விளையாடப் போகிறார்கள் என்பது தெரியாததால் பிளே ஆஃப்-க்கு முன்னேறிய 4 அணி கேப்டன்களின் புகைப்படங்களுடன் மைதானத்தை அலங்கரித்ததாக கூறினர்.
ஆனால் ரசிகர்களில் சிலர் ஒரு நுழைவு வாயிலில் உள்ள புகைப்படத்தை மட்டும் எடுத்து தவறான தகவலை பரப்பியுள்ளதாகவும், இதனடிப்படையில் வெளியிடப்பட்ட செய்திகள் தவறு என்பதையும் ஈடிவி பாரத் உறுதி செய்கிறது.
செய்தியில் கூறப்பட்ட தகவல்: ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தேர்வாகும் குவாலிபயர் மேட்ச் பிக்சிங்கா? என கேள்வி எழுப்பப்பட்டது. ஆதாரம் என கூறி புகைப்படம் பகிரப்பட்டது.
உண்மை: பிளே ஆஃப்-க்கு தகுதி பெற்ற 4 அணிகளுக்குமே பேனர் வைக்கப்பட்டுள்ளது.
முடிவு: சேப்பாக்கம் மைதான அதிகாரிகள் மற்றும் நேரில் ஆய்வு செய்த செய்தியாளரின் கூற்றுப்படி பிளே ஆஃப்க்கு முன்னேறிய 4 அணிகளின் கேப்டன்களின் புகைப்படங்களுமே பேனராக உள்ளது. பேனரை வைத்து மேட்ச் பிக்சிங் என கூறுவதிலோ, சர்ச்சை என சந்தேகம் எழுப்புவதிலோ உண்மை இல்லை.
இதையும் படிங்க: ராஜஸ்தான் வீழ்ச்சியும் ஹைதராபாத் அணியின் எழுச்சியும் - ஐபிஎல் போட்டி அலசல்! - SRH VS RR QUALIFIER 2