சென்னை: பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதற்காக விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில் தி மிஷன் ஒலிம்பிக் செல் (The mission olympic cell) என்று தொடங்கப்பட்டு கடந்த ஆண்டு முதல் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதில் தடகள போட்டிக்கு 6 கோடியே 25 லட்ச ரூபாயும், பேட்மிண்டன் போட்டிக்கு 5 கோடியே 77 லட்ச ரூபாயும், துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு 3 கோடியே 83 லட்ச ரூபாயும், டென்னிஸ் போட்டிக்கு 1 கோடியே 57 லட்ச ரூபாயும் பயிற்சி நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், மல்யுத்தம் போட்டிக்கு 55 லட்ச ரூபாயும், பளுதூக்குதல் போட்டிக்கு 42 லட்ச ரூபாயும், குத்துச்சண்டை போட்டிக்கு 36 லட்ச ரூபாயும், மற்றும் பாரா விளையாட்டுகளுக்கு 1 கோடியே 17 லட்ச ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுகளுக்கு தனியாக இவ்வளவு தொகை என்றால் வீரர்களுக்கும் தனித்தனியாக பயிற்சிக்கு செலவு செய்யப்பட்டுள்ளது.
அதில் கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, பின்லாந்து, துருக்கி ஆகிய நாடுகளில் 176 நாட்கள் பயிற்சி பெற்றதில் 48 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. தடகள வீரர்களான அவினாஷ் சாப்ளே, பருல் சவுத்ரி, ஹர்மிலன் பைன்ஸ் ஆகியோர் அமெரிக்காவில் 17 நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டதில் 1 கோடியே 79 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
கடந்த ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஜெர்மனியில் 36 நாட்கள் பயிற்சி பெற்றதில் 26 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மற்றொரு பேட்மிண்டன் வீரர் லட்சயா சென் பிரான்ஸ் நாட்டில் 14 நாட்கள் பயிற்சி பெற்றதில் 9 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஸ்பெயின், பல்கேரியா, ஹங்கேரி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் 97 நாட்கள் பயிற்சி பெற்றதில் 33 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. டென்னிஸ் வீரர் ரோகன் போபன்னா அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் 181 நாட்கள் பயிற்சி மேற்கொண்டதில் 1 கோடியே 3 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
பளூதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு அமெரிக்காவில் 65 நாட்கள் பயிற்சி பெற்றார். அவருக்கு 42 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் ஜெர்மனியில் 44 நாட்கள் பயிற்சி பெற்றதில் 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டது. இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் மற்ற வீரர் வீராங்கனைகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை: இருவேறு விபத்துகளில் கிரிவலம் வந்த பக்தர்கள் உள்ளிட்ட 4 பேர் பலி! - Tiruvannamalai car accident