ஐதராபாத்: 18வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக மினி ஏலமும், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு மெகா ஏலமும் நடத்தப்படும். அந்த வகையில் 2025 ஐபிஎல் சீசனுக்கு முன் மெகா ஏலம் நடத்தப்பட உள்ளது.
தக்கவைப்பு வீரர்கள் பட்டியல்:
இந்த மாத இறுதியில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் மெகா ஏலத்தை நடத்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதற்கு முன் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி மொத்தம் உள்ள 10 அணிகளும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட வீரர்கள் தக்கவைக்கப்பட்ட நிலையில், 200க்கும் மேற்பட்ட வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர்.
மெகா ஏலத்திற்கு ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த முறை ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சம் 6 வீரர்கள் வரை தக்கவைக்க ஐபிஎல் நிர்வாகம் அனுமதித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் ஆர்டிஎம் விதிமுறையும் இந்த முறை ஐபிஎல் அணிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
5 வீரர்கள் தக்கவைப்பு:
சென்னை அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மதீஷ பத்திரனா, எம்.எஸ்.தோனி ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வரும் சீசனில் தோனி விளையாடுவார் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் தோனிக்கு பின்னர் சென்னை அணியில் விக்கெட் கீப்பிங் பணியை யார் மேற்கொள்வார் என்ற சந்தேகம் நீண்ட நாட்களாக நிலவி வருகிறது.
ரிஷப் பன்ட் அல்லது கே.எல். ராகுலை ஏலத்தில் எடுத்து சென்னை அணியின் அடுத்த விக்கெட் கீப்பராக நியமிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில், சில சிக்கல்களால் ஏலத்தில் ரிஷப் பன்ட் மற்றும் கே.எல். ராகுலை சென்னை அணி கைப்பற்ற முடியாத சூழல் நிலவுவதாக சொல்லப்படுகிறது.
சென்னை அணிக்கு சிக்கல்?:
சென்னை அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்களுக்கு சம்பளமாக 65 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஒரு அணி அதிகபட்சமாக 120 கோடி ரூபாய் வரை மட்டுமே வீரர்களுக்கு சம்பளமாக பயன்படுத்த முடியும் என்ற ஐபிஎல் விதி உள்ளது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 55 கோடி ரூபாய் மட்டுமே தற்போது கைவசம் உள்ளது.
இந்த 55 கோடி ரூபாயை வைத்து தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் தங்கள் அணிக்கு தேவையான மற்ற வீரர்களை வாங்க முடியும். குறைந்தது 13 வீரர்கள் முதல் அதிகபட்சம் 20 வீரர்கள் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுக்க முடியும். அந்த வகையில் சென்னை அணியால் ஏலத்தில் அதிக தொகை கொடுத்து எந்த வீரரையும் வாங்க முடியாது சூழல் நிலவுகிறது.
மாற்று வீரர் யார்?:
சென்னை அணியால் ரிஷப் பன்ட்டை வாங்க முடியாத சூழல் ஏற்படும் போது, கே.எல் ராகுலை வாங்க முடியும் எனக் கூறப்பட்டாலும், தற்போது அதுவும் சாத்தியமில்லை என கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஏலத்தில் ரிஷப் பண்ட் பெயர் அறிவிக்கப்பட்டால் நிச்சயம் அவருக்கு 15 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை கேட்கப்படும்.
அதேபோல் கே.எல் ராகுல் பெயர் அறிவிக்கப்படும் போது, அவருக்கும் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை கேட்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒரு வீரருக்கு மட்டுமே அத்தகைய தொகையை சென்னை அணி செலவிட்டால் மற்ற வீரர்களை ஏலத்தில் எடுப்பதில் சிக்கல் நிலவும். எனவே, ரிஷப் பன்ட் அல்லது கே.எல் ராகுலை தாண்டி மாற்று வீரரை சென்னை அணி நிர்வாகம் யோசிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: புது வரலாறு படைத்த பாகிஸ்தான்! 22 ஆண்டுகளுக்கு பின் முதல் முறை!