சென்னை: ஐபிஎல் 17வது தொடரின் முக்கியமான லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. ஏற்கனவே கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இன்று வெற்றி பெறும் அணி நான்காவதாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை பெறும். இரு பலம் வாய்ந்த அணிகள் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் கோலி நல்ல அதிரடியான ஃபார்மில் உள்ளார். டூ பிளஸிஸ் கடைசியாக விளையாடிய சில போட்டிகள் சரியாக விளையாடவில்லை என்றாலும், நல்ல ஃபார்மில் உள்ளார்.
அதே நேரத்தில் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்க்கிறார், ரஹானே இந்த சீசன் சொல்லிக் கொள்ளும்படி ரன்கள் சேர்க்கவில்லை. ரஹானே இன்று நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.
பெங்களூரு அணியில் ஃபார்மில் உள்ள வில் ஜாக்ஸ் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளதால் இன்றைய போட்டியில் அவர் விளையாடமாட்டார். அதே நேரத்தில் பட்டிதார், கேமரான் கிரீன், தினேஷ் கார்த்திக் நல்ல ஃபார்மில் உள்ளனர்.
சிஎஸ்கே அணியை பொறுத்தவரை ரவீந்திரா அவ்வப்போது நன்றாக ஆடி வருகிறார். மொயின் அலி உலகக் கோப்பை போட்டிக்கு ஆயத்தமாக நாடு திரும்பியுள்ளார். அவருக்கு பதிலாக சமீர் ரிஸ்வி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே மிடில் ஆர்டரில் டேரில் மிட்செல், ஷிவம் துபே, ஜடேஜா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். தோனியின் கடைசி நேர அதிரடி அணிக்கு பலம் சேர்க்கிறது.
பவுலிங்கில் சிஎஸ்கே அணி பலவீமனமாக காட்சியளிக்கிறது. பதிரனா, முஸ்தஃபிசூர் தொடரில் இருந்து விலகியுள்ளதால் தேஷ்பாண்டே, சிமர்ஜித் சிங், சாண்ட்னர் ஆகியோரை அணி நம்பியுள்ளது.
ஆர்சிபி அணிக்கு யாஷ் தயால் நம்பிக்கை அளிக்கிறார். அதேநேரத்தில் முகமது சிராஜ் ரன்களை கட்டுகோப்பாக வழங்கினால் நல்லது.
மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?: பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் மழை குறுக்கிட்டு ஆட்டம் ஒட்டுமொத்தமாக ரத்தானால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் மழை குறுக்கிடும்பட்சத்தில் கூடுதலாக 60 நிமிடங்கள் வழங்கப்படும், இரவு 12 மணிவரை போட்டி நடத்த முடியாவிட்டால் ரத்து செய்யப்படும்.
குறைந்தபட்சம் 5 ஓவர் போட்டியாக நடத்தப்படும். அவ்வாறு நடத்தப்பட்டால் பெங்களூரு முதலில் பேட் செய்யும்பட்சத்தில் 70 ரன்கள் எடுத்தால், சிஎஸ்கே அணியை 52 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல் சிஎஸ்கே முதலில் பேட் செய்து 70 ரன்கள் அடிக்கும்பட்சத்தில், ஆர்சிபி ரன்ரேட்டின்படி, அதனை 3 ஓவருக்குள் சேஸ் செய்ய வேண்டும்.
போட்டி நடைபெறும் நேரத்தில் மழையினால் இடையூறு ஏற்படும்பட்சத்தில் டிஎல்எஸ் (DLS) முறைப்படி போட்டியின் முடிவு எட்டப்படும். பெங்களூருலில் இன்று மழை பெய்ய 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இன்று காலை முதல் பெங்களூருவில் மழை பெய்யவில்லை என்பது ரசிகர்களுக்கு நல்ல செய்தியாக உள்ளது.
இதையும் படிங்க: பூரன் அதிரடியில் லக்னோ அணி ஆறுதல் வெற்றி; ஏமாற்றத்துடன் விடைபெற்றது மும்பை அணி! - IPL 2024