சென்னை: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 26ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் விளையாடி வருகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இந்த போட்டியானது தொடங்கியுள்ளது. சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கியுள்ளார். இத்தனை ஆண்டு காலம் சிஎஸ்கே அணியின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கிய தோனி, இந்த முறை வெறும் வீரராக மட்டுமே களமிறங்குகிறார். இது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்தாலும், தோனியின் ஆட்டத்தை பார்த்தால் போதும் என்ற மனநிலையில் ரசிகர்கள் உள்ளனர்.
இன்று முதல் போட்டியைக் காண பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் மாலை முதலே குவிந்துள்ளனர். எப்படியும் இன்று சென்னை அணி வெற்றி பெறும் சென்று நம்பிக்கையுடன் உள்ளனர். குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து வயதினரும் இப்போட்டியைக் காண மைதானத்தில் குவிந்துள்ளனர்.
இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோனி தனது கடைசி தொடரை கோப்பையுடன் நிறைவு செய்ய வேண்டும் என்பதே அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் கனவாக உள்ளது. தோனியை பார்க்கத்தான் இங்கு வந்துள்ளோம், எப்படியும் இந்த போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெறும் என ரசிகர்கள் ஈடிவி பாரத் செய்திக்கு பேட்டி அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: வெற்றியுடன் துவக்குமா சென்னை… டாஸ் வென்ற பெங்களூரு பேட்டிங் தேர்வு! - CSK Vs RCB