ஐதராபாத்: 2023ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு பின்னர் ஏறத்தாழ ஓராண்டாக இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை காண முடியவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் அவர் இந்திய அணியுடன் இணைவார் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் முகமது ஷமி இடம் பெறுவார் என தெரிகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ள நிலையில், முகமது ஷமியின் அணிக்கு கூடுதல் பலத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, "இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய தயாராக உள்ளது. பும்ராவுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளோம். ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் உடல் தகுதியுடன் உள்ளனர். பந்துவீச்சு ஜாம்பவான் முகமது ஷமி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணத்தில் இடம் பெறுவார். அணிக்கு அவர் தேவை, அவர் பொருத்தமாக இருப்பார் என்று நாங்கள் நினைக்கிறோம் " என்று கூறினார்.
அதேபோல் பிசிசிஐ தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விளையாடுவார் எனத் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் சினேஷிஷ் கங்குலி, முதலில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி ஷமி தனது உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதற்கு முன்பாக ரஞ்சிக் கோப்பையில் விளையாடி முகமது ஷமி தனது உடற்தகுதியை நிரூபிப்பது அவசியம் என்று அவர் கூறினார். இதையடுத்து அடுத்தடுத்து இரண்டு ரஞ்சி போட்டிகளில் முகமது ஷமி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் 11ஆம் தேதி ரஞ்சிக் கோப்பை தொடங்க உள்ள நிலையில் மேற்கு வங்கம் அணியில் முகமது ஷமி விளையாடுகிறார்.
Mohammad Shami with team Nepal at the NCA in Bengaluru.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 18, 2024
- Great gesture by Shami...!!! 🫡❤️ pic.twitter.com/eM3MjBveVL
ரஞ்சிக் கோப்பை தொடரின் இடையே நியூசிலாந்து தொடரிலும் அவர் விளையாட உள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக அக்டோபர் மாதம் நடைபெற உள்ள நியூசிலாந்து கிரிக்கெட் தொடரில் முகமது ஷமி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்டர் கவாஸ்கர் தொடரை இந்தியா தொடர்ந்து இரண்டு முறை வென்று உள்ளது. இந்த முறையும் வென்றால் அது ஹாட்ரிக் வெற்றியாக அமையும். கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் கண்ட தோல்விக்கு பழிதீர்க்கும் வகையிலும் இந்த வெற்றி அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "ரிவர்ஸ் ஸ்விங்கை எப்படி எதிர்கொண்டேன்?"- மனம் திறந்த சச்சின் தெண்டுல்கர்! - Sachin tendulkar