மும்பை: இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்ற 17-ஆவது ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக முடிவடைந்தது. இதில் சென்னையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
முன்னதாக 2012, 2014ஆம் ஆண்டுகளில் கோப்பையைக் கைப்பற்றிய கொல்கத்தா அணி இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியனான கொல்கத்தாவுக்கு 20 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்ட நிலையில் இரண்டாம் இடம் பிடித்த ஐதராபாத்துக்கு 12.50 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
இத்தொடரில் 741 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் விருதை விராட் கோலி பெற்றார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 2 முறை ஆரஞ்சு கேப் வென்ற இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அடுத்தாக 24 விக்கெட்டுகளை கைப்பற்றி பர்பிள் கேப் விருதினை பஞ்சாப் அணியைச் சேர்ந்த ஹர்ஷல் படேல் பெற்றுள்ளார். மேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏராளமான வீரர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது.
வீரர்கள் மட்டும் பரிசுகள் குவித்திருக்கும் நிலையில் தற்போது ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக நடத்த உதவிய மைதானங்களுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பரிசுத்தொகை அறிவித்துள்ளார். அதன் படி இறுதிப்போட்டி நடைபெற்ற சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், குஜராத், முல்லான்பூர், ஜெய்பூர், லக்னோ மற்றும் குஜராத் ஆகிய 10 முதன்மை மைதானங்களுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுவதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
அத்துடன் விசாகப்பட்டினம், கவுகாத்தி மற்றும் தர்மசாலா ஆகிய 3 நகரங்களில் உள்ள மைதானங்களில் போட்டிகள் குறைவானதாகவே நடைபெற்றன. ஆகையால் அந்த 3 மைதானங்களுக்கு தலா ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்குவதாக ஜெய் ஷா அறிவித்துள்ளார். ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக நடத்துவதற்காகப் பாடுபட்ட மைதான ஊழியர்களைப் பாராட்டும் வகையில் இந்த பரிசுத்தொகை கொடுக்கப்படுவதாக ஜெய் ஷா பிசிசிஐ செயலாளர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கோடிகளில் புரளும் ஐபிஎல் அணிகள்..வெற்றி பெற்ற கேகேஆர் அணிக்கு பரிசு எவ்வளவு? - IPL 2024 Prize Money Details