ஐதராபாத்: துலிப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய பி அணியில் அதிரடி ஆட்டக்காரர் ரின்கு சிங் இடம் பிடித்து உள்ளார். முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் இரண்டாவது சுற்று ஆட்டங்களுக்கான வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங் உள்ளது.
இதில் கலந்து கொள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்ட இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர். இதனால் துலிப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் வீரர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் அதன் காரணமாக அப்டேட் அணியை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது.
ரின்கு சிங் சேர்ப்பு:
இந்திய பி அணிக்கு அதிரடி ஆட்டக்காரர் ரின்கு சிங் அழைக்கப்பட்டு உள்ளார். இந்திய அணியில் இடம் பிடிக்க நட்சத்திர வீரர் ரின்கு சிங் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். இருப்பினும், அவருக்கு போதிய வாய்ப்புகள் வழங்கபடவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், 20 ஓவர் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரின்கு சிங் இடம் பிடித்த போதிலும் மெயின் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியிலும் அவர் சேர்க்கப்படவில்லை. இதனால் அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தான் துலிப் கோப்பைக்கான இந்தியா பி அணியில் அவர் இடம் பிடித்துள்ளார். மேலும் துலிப் கோப்பை விளையாடி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பன்ட் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.
யார் யார் விடுவிப்பு:
அதேபோல் இந்தியா ஏ அணியின் கேப்டன் சுப்மன் கில், கே.எல் ராகுல், துருவ் ஜுரல், குல்திப் யாதவ், ஆகாஷ் தீப் ஆகியோரையும் வங்கதேச டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக துலிப் கோப்பையில் இருந்து பிசிசிஐ விடுவிடுத்துள்ளது. மேலும் சுப்மன் கில்லுக்கு மாற்றாக ரயில்வே அணியில் விளையாடி வரும் பிரதம் சிங்கும், கே.எல் ராகுல் மற்றும் துருவ் ஜுரல் ஆகியோருக்கு மாற்றாக அக்ஷய் வத்கர் மற்றும் எஸ்கே ரஷீத் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
CHANGES IN DULEEP TROPHY SQUAD FOR ROUND 2. 🇮🇳 pic.twitter.com/66f5tCThoU
— Johns. (@CricCrazyJohns) September 10, 2024
மேலும் மயங்க் அகர்வால் இந்திய ஏ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் மயங்க் அகர்வால் கேப்டன் பொறுப்பை கவனிப்பது குறிப்பிடத்தக்கது.
அணிகள் விவரம்:
அப்டேடட் இந்திய ஏ அணி: மயங்க் அகர்வால் (கேப்டன்), ரியான் பராக், திலக் வர்மா, சிவம் துபே, தனுஷ் கோட்டியான், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, அவேஷ் கான், குமார் குஷாக்ரா, ஷாஸ்வத் ராவத், பிரதம் சிங், அக்ஷய் வத்கர், எஸ்கே ரஷீத், ஷம்ஸ் முலானி, ஆகிப் கான்.
இந்தியா பி அணியை பொறுத்தவரை யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பன்ட் ஆகியோருக்கு பதிலாக சுயாஷ் பிரபுதேசாய் மற்றும் ரின்கு சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அப்டேடட் இந்திய பி அணி: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), சர்பராஸ் கான், முஷீர் கான், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, முகேஷ் குமார், ராகுல் சாஹர், சாய் கிஷோர், மோஹித் அவஸ்தி, என்.ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), சுயாஷ் பிரபுதேசாய், ரின்கு சிங், ஹிமான்ஷு மந்திரி (விக்கெட் கீப்பர்).
அப்டேடட் இந்திய டி அணி: ஸ்ரேயாஸ் லியர் (கேப்டன்), அதர்வா டைடே, யாஷ் துபே, தேவ்தத் படிக்கல், ரிக்கி புய், சரண்ஷ் ஜெயின், அர்ஷ்தீப் சிங், ஆதித்யா தாகரே, ஹர்ஷித் ராணா, ஆகாஷ் சென்குப்தா, கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), சௌரப் குமார், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), நிஷாந்த் சிந்து , வித்வத் கவேரப்பா.
இந்திய சி அணியில் மட்டும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் சுற்றில் விளையாடிய வீரர்கள் அனைவரும் அப்படியே இரண்டாவது சுற்று ஆட்டங்களில் கலந்து கொள்ள உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இரண்டாவது சுற்று ஆட்டங்கள் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.
இதையும் படிங்க: "நீரஜ் சோப்ராவுடனான எனது தொடர்பு.."- முதல் முறையாக மனம் திறந்த மனு பாக்கர்! - Manu Bhaker On Neeraj Chopra