சென்னை: இந்தியாவின் வலுவான கிளாசிக்கல் செஸ் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2வது சீசன் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த நவ.05 தொடங்கி இதுவரை 5 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், தொடரின் 6வது நாளான நேற்று (நவ.10) 6வது சுற்றுக்கான போட்டிகள் நடைபெற்றது.
மாஸ்டர்ஸ் பிரிவு: மாஸ்டர்ஸ் பிரிவில் 1வது போர்டில் விளையாடிய ஈரான் நாட்டை சேர்ந்த அமீன் தபதாபேயி, சகநாட்டைச் சேர்ந்த பர்ஹாம் மக்சூட்லூவுடன் மோதினார்கள். இருவருக்கு இடையேயான ஆட்டம் 36-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.
2-வது போர்டில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான அரவிந்த் சிதம்பரமும், அர்ஜுன் எரிகைசியும் பலப்பரீட்சை நடத்தினார்கள். உலகத்தர வரிசையில் இரண்டாவது இடம் வகிக்கும் அர்ஜுன் எரிகைசி கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். இப்போட்டியில் அர்ஜுன் எரிகைசி தமிழகத்தைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரத்திடம் 48-வது நகர்த்தலின் போது அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதுவரை நடந்த 5 சுற்றுகளில் தோல்வியைச் சந்திக்காத அர்ஜுன் எரிகைசி தனது முதல் தோல்வியை பதிவு செய்துள்ளார்.
Aravindh @pawnof64squares Chithambaram has shook up the Chennai Grand Masters. The Chennai Super-GM scored a fantastic win with the White pieces against the India no.1 and World no.2 player Arjun Erigaisi! He conducted a beautiful attack on Arjun's King, and went on to score a… pic.twitter.com/z7K6dYqNfk
— ChessBase India (@ChessbaseIndia) November 10, 2024
3-வது போர்டில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாக்சிம் வாச்சியர் லாக்ரேவ் செர்பியாவின் அலெக்ஸி சரானாவை எதிர்கொண்டார். இருவருக்கு இடையே நடந்த இந்த ஆட்டம் 31வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 4 வது போர்டில் இந்தியாவின் விதித் குஜ்ராத்தியும், அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த லெவோன் அரோனியனும் விளையாடினார்கள். இந்த ஆட்டம் 64வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.
7 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் 6 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், அர்ஜுன் எரிகைசி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த லெவோன் அரோனியன் 4 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், தமிழகத்தைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் 3.5 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், ஈரானின் அமீன் தபதாபேயி 3.5 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், பிரான்ஸின் மாக்சிம் வாச்சியர் லாக்ரேவ் 2.5 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், பர்ஹாம் மக்சூட்லூ 2.5 புள்ளிகளுடன் 6வது இடத்திலும், விதித் குஜ்ராத்தி 2 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், அலெக்ஸி சரானா 2 புள்ளிகளுடன் 8வது இடத்திலும் உள்ளனர்.
6 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், இத்தொடரின் கடைசி நாளான இன்று (நவ.11) கடைசி மற்றும் 7-வது சுற்றுக்கான ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இதில், லெவோன் அரோனியனும் அமீன் தபதாபேயியுடன் மோதுகின்றனர். அலெக்ஸி சாரானா, விதித் குஜ்ராத்தியை சந்திக்க உள்ளார். அர்ஜுன் எரிகைசி, மாக்சிம் வாச்சியர் லாக்ரேவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். பர்ஹாம் மக்சூட்லூ, அரவிந்த் சிதம்பரத்துடன் மோதுகிறார்.
இதையும் படிங்க: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: முதல் முறையாக 'டிரா' செய்த அர்ஜுன் எரிகேசி.. 4 புள்ளிகளுடன் முதல் இடம்!
சேலஞ்சர்ஸ் பிரிவு: 6 வது நாளான நேற்று (நவ.10) 6வது சுற்றுக்கான ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் 1வது போர்டில் லியோன் மென்டோன்காவும், கார்த்திக்கேயன் முரளி விளையாடினர். இந்த போட்டியில் லியோன் மென்டோன்கா 62வது நகர்த்தலின்போது வெற்றி பெற்றார். 2வது போர்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.வைஷாலி, அபிமன்யு புராணிக்கை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஆர்.வைஷாலி 36வது நகர்த்தலின் போது அபிமன்யுவிடம் தோல்வியை சந்தித்தார்.
3வது போர்ட்டில் ரவுனக் சத்வானி, ஹரிகா துரோணவல்லியை சந்தித்தார். இந்த ஆட்டம் 42வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 4வது போர்டில் பிரணவ் மற்றும் பிரனேஷும் மோதினார்கள். இந்த போட்டியில் பிரணவ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். தொடர்ந்து நடைபெற்ற இந்த ஆட்டம் 35வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.
7 சுற்றுகள் கொண்ட இத்தொடரில் 6 சுற்றுகளின் முடிவில் பிரணவ் 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். லியோன் மென்டோன்கா 4.5 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ரவுனக் சத்வானி 3.5புள்ளிகளுடன் 3வது இடத்திலும், அபிமன்யு புராணிக் 3 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், பிரனேஷ் 3 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், கார்த்திகேயன் முரளி 2.5 புள்ளிகளுடன் 6வது இடத்திலும், ஹரிகா துரோணவல்லி 1.5 புள்ளியுடன் 7வது இடத்திலும், ஆர்.வைஷாலி 1 புள்ளியுடன் 8வது இடத்திலும் உள்ளனர்.
இத்தொடரின் இறுதி நாளான இன்று (நவ.11) கடைசி மற்றும் 7வது சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இதில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பிரணவ், இரண்டாம் இடத்தில் இருக்கும் லியோன் மென்டோன்காவை எதிர்கொள்கிறார். ஹரிகா துரோணவல்லி, பிரனேட்ஷை எதிர்கொள்கிறார். அபிமன்யு புராணிக், ரவுனக் சத்வானியை சந்திக்கிறார். ஆர்.வைஷாலி, கார்த்திகேயன் முரளியை எதிர்கொள்கிறார். இன்று மதியம் 1 மணிக்கு 7வது சுற்றுக்கான ஆட்டங்கள் தொடங்கும். வெற்றி பெறுபவர்களுக்கு இன்று இரவு நடைபெறும் நிறைவு விழாவில் பரிசளிக்கப்படும்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்