டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 53 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை அன்டிம் பங்கல், துருக்கியை சேர்ந்த Yetgil Zeynep எனபவரை எதிர்கொண்டார். அறிமுக ஒலிம்பிக் போட்டி என்பதால் கடும் பதற்றத்தில் விளையாடிய அன்டிம் பங்கல் தென் கொரிய வீராங்கனையிடம் 10-க்கு 0 என்ற புள்ளிகள் கணக்கில் படுதோல்வி அடைந்தார்.
இந்நிலையில், அன்டிம் பங்கலுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை கொண்டு அவரது தங்கை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் கிராமத்திற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. அவரது அடையாள ஆவணங்களை சரிபார்த்த பாரீஸ் போலீசார் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டு இருப்பதை கண்டறிந்து அவரை கைது செய்தனர்.
அதேநேரம் இது தொடர்பாக அன்டிம் பங்கலுக்கும் பாரீஸ் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இந்நிலையில், தீவிர சோதனைக்கு பின்னர் அன்டிம் பங்கலின் தங்கையை பாரீஸ் போலீசார் எச்சரித்து விடுவித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், ஒலிம்பிக் போட்டிகளுக்கான விதிகளை மீறியதால் அன்டிம் பங்கல், அவரது பயிற்சியாளர் மற்றும் குழுவினருக்கு ஒலிம்பிக் கிராமத்திற்குள் நுழைவதற்கான அனுமதியை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் ரத்து செய்தது.
மேலும், அனுமதி ஆணை ரத்து செய்யப்பட்டதை அடுத்து மல்யுத்த வீராங்கனை அன்டிம் பங்கல், பயிற்சியாளர் மற்றும் குழுவினர் உடனடியாக வெளியேற ஒலிம்பிக் சங்கம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அன்டிம் பங்கல் மற்றும் இந்திய குழுவினர் ஒலிம்பிக் கிராமத்தை விட்டு உடனடியாக வெளியேறி நாடு திரும்புமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒலிம்பிக் கிராமத்திற்குள் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், அந்தந்த நாடுகளை சேர்ந்த பயிற்சிக் குழுவினர் தவிர வேறு யாரும் நுழையக் கூடாது என்பது விதியாகும். இந்நிலையில், அன்டிம் பங்கலின் அனுமதி ஆணையை கொண்டு அவரது தங்கை ஒலிம்பிக் கிராமத்திற்குள் நுழைந்த நிலையில், கையும் களவுமாக மாட்டிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, மகளிர் மல்யுத்தம் 50 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் பதக்க வாய்ப்பு பறிபோனது. நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோ எடையை காட்டிலும் சில கிராம்கள் எடை அதிகமாக இருப்பதாக கூறி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய மறுநாளில் மற்றொரு மல்யுத்த வீராங்கனை சர்ச்சையில் சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பளுதூக்கும் போட்டியில் பறிபோன பதக்கம்.. கண்ணீருடன் வெளியேறினார் மீராபாய் சானு! - Paris Olympics 2024