தஞ்சாவூர்: கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாசி மகா மகம் உலக பிரசித்தி பெற்றது. கடந்த 2016ஆம் மகா மகம் நடைபெற்றநிலையில், அடுத்து மகாமகம் வருகிற 2028ஆம் ஆண்டு நடைபெறும். மேலும், ஆண்டுதோறும் மாசி மாதம், மக நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி தினத்தில், மாசிமக தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
மாசி மகம் கும்பகோணத்தில் உள்ள 12 சைவ திருத்தலங்கள் மற்றும் 5 வைணவ தலங்களில் இணைந்து நடைபெறும் விழாவாகும். அந்த வகையில், இந்த ஆண்டு மாசி மக உற்சவம், சைவ தலங்கள் ஐந்தில், கடந்த பிப்ரவரி 15ஆம் தேதியும், வைணவ தலங்கள் மூன்றில் பிப்ரவரி 16ஆம் தேதியும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி திருவீதியுலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாசிமக பெருவிழா கொடியேற்றம் நடைபெற்ற ஐந்து சைவ திருத்தலங்களிலும் 7ஆம் நாளான நேற்று இரவு திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
அதன் ஒருபகுதியாக, மகாமக திருக்குளத்தின் கிழக்கு கரையில் அமைந்துள்ள, அமிர்தவள்ளி சமேத அபிமுகேஸ்வர கோயிலில், உற்சவர் சுவாமிகள் கோயில் ராஜகோபுரம் முன்பு எழுந்தருள, நாதஸ்வரம், மேள தாளம், மங்கல வாத்தியங்கள் முழங்க, மாலை மாற்றும் வைபம் மற்றும் ஊஞ்சலில் வைத்து நலங்கு வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனையடுத்து சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் மற்றும் ப்ரவரம் கூறி, யாகம் வளர்த்து, புது வஸ்திரங்கள் சமர்ப்பித்து, 16 விதமான சோடச உபசாரங்கள் செய்யப்பட்டு திருமாங்கல்ய வைபவம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.’
இதனையடுத்து, கொடியேற்றம் நடைபெற்ற, காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வர, கௌதமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், பாணபுரீஸ்வரர், கோடீஸ்வரர், நாகேஸ்வரர், அமிர்தகலசநாதர் மற்றும் ஏகாம்பரேஸ்வரர் ஆகிய 10 கோயில்களில், நாளை (பிப்.23) மாலை தேரோட்டமும், 24ஆம் தேதி நண்பகல் மகாமக திருக்குளத்தில், பத்து சிவாலயங்களில் இருந்து உற்சவர்கள் 4 கரைகளிலும் எழுந்தருள, மாசிமக தீர்த்தவாரி நடைபெறுகிறது.’
இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனைய இரு கோயில்களான ஆதிகும்பேஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் ஆகிய இரு தலங்களில் கும்பாபிஷேக திருப்பணி நடைபெறுவதால் இந்த ஆண்டு மாசிமக தீர்த்தவாரி நடைபெறவில்லை.
இதையும் படிங்க: தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024: முதலமைச்சர் அறிவிப்பு - சிறப்பம்சங்கள் என்னென்ன?