தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவினை முன்னிட்டு, பந்தல்கால் நடும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. பெரிய கோயில் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் ஸ்ரீபெரியநாயகி அம்மன் உடனாகிய ஸ்ரீபெருவுடையார் கோயில் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டு, உலக பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக விளங்கி வரும் இக்கோயில், கட்டிடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாய் உள்ளது.
இக்கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருவர். இந்த நிலையில், உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலை எழுப்பிய மன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினத்தன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் வெகு சிறப்பாக நடைபெறும்.
இதையும் படிங்க: தீபாவளி நாளில் அதிகரித்த காற்று மாசு.. பட்டாசு வெடிக்கும் நேரத்தை மாற்ற வேண்டுமா? பூவுலகின் நண்பர்கள் கூறுவது என்ன?
அதேபோல், இந்த ஆண்டு மன்னன் ராஜராஜ சோழனின் 1039ஆம் ஆண்டு சதய விழா வரும் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை அடுத்து இன்று தஞ்சை பெரிய கோயிலில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நாதஸ்வர மேளம், தாளம் இசைக்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் திருமுறை பாட, பந்தல்காலுக்கு திரவிய பொடி, பால், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மகாதீபாரதனை காட்டப்பட்டது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, சதய விழாக் குழு தலைவர் செல்வம், கவுன்சிலர் மேத்தா, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, செயல் அலுவலர் மாதவன் உள்ளிட்ட கோயில் அலுவலர்கள், பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்