மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, அழகர் கோயிலில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி அழகர் மலையை விட்டு தங்கப் பல்லக்கில் மதுரையை நோக்கி கள்ளழகர் புறப்பட்டார். தொடர்ந்து 22ஆம் தேதி மதுரை மூன்றுமாவடி அருகே பக்தர்கள் திரண்டு கள்ளழகரை வரவேற்ற எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையடுத்து, 23ஆம் தேதி அதிகாலை 6 மணியளவில், பக்தர்களின் 'கோவிந்தா' கோஷம் முழங்க கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார். அன்று பிற்பகல் ராமராயர் மண்டபத்தில் அழகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அன்றிரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் கள்ளழகர் தங்கினார்.
பின்னர், 24ஆம் தேதி கருட வாகனத்தில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். அன்றிரவு, ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்வு நடைபெற்றது. இதில் விடிய விடிய பல்வேறு அவதாரங்களில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின், கடந்த 25ஆம் தேதி அதிகாலை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளையும் முடித்துவிட்டு, நேற்று (ஏப்.26) திருமாலிருஞ்சோலையை நோக்கி புறப்பாடாகினார்.
இந்நிலையில், இன்று (ஏப்.27) காலையில் அழகர் மலைக்கு கள்ளழகர் வந்தடைந்தார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு பூசணிக்காய்கள் மூலம் திருஷ்டி சுற்றப்பட்டு கண் திருஷ்டி கழிக்கப்பட்டது. இந்நிலையில், நாளை (ஏப்.28) உற்சவ சாந்தியுடன் அழகர் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.
இதையும் படிங்க: விடிய விடிய நடைபெற்ற கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு! - MADURAI CHITHIRAI FESTIVAL