இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்திற்கு பல சிறப்புகள் உண்டு. அதிலும் இஃப்தார் எனப்படும் தினமும் விரதத்தை முடித்துக் கொள்வதற்காக தயாரிக்கப்படும் உணவுகள் மிகவும் பிரபலமானவை. தமிழகத்தில் நோன்பு கஞ்சி பிரபலமான உணவாக இருப்பதை போல, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தயாரிக்கப்படும் ஹலீம் உலகப் புகழ் பெற்றது.
தானியங்களையும், இறைச்சியையும் கொண்டு சுமார் 8 மணி நேரம் இந்த ஹலீம் சமைக்கப்படும். அப்படிப்பட்ட இந்த ஹலீம், நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளிலும் பிரபலமடைந்துள்ளது. அண்மையில் ரமலான் மாதம் முதல் நோன்பை முன்னிட்டு ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் ஹலீம் இலவசமாக தரப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் அந்த கடையில் கூடிய மக்கள் கூட்டத்தை சமாளிக்க, தடியடி நடத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டது. மக்கள் மத்தியில் இவ்வளவு பிரபலமடைந்த ஹலீமை, எட்டு மணி நேரம் கஷ்டமில்லாமல் ஓரளவிற்கு எளிமையாக வீட்டிலேயே சமைக்கலாம். ஹலீம் தயாரிக்கும் பணி கடினம் தான் ஆனால் அதன் சுவை பட்ட கஷ்டத்தையெல்லாம் காணாமல் போக்கிவிடும்.
ஹலீம் சமைக்க சிக்கன், மட்டன் அல்லது பீஃப் ஆகியவற்றில் ஏதாவது ஒரு இறைச்சி வகைய பயன்படுத்தலாம். ஹலீமின் சமையல் முறையை எளிமையாகக் கூறுவதென்றால் தானியங்களையும், கறியையும் தனித் தனியாக சமைத்து, பிறகு இரண்டையும் ஒன்றாக சமைக்க வேண்டும்.
ஹலீம் செய்ய தேவையான பொருட்கள்: மட்டன் 1 கிலோ (தனிக்கறி), பிரியாணி இலை, இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கோதுமை ரவை, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லி தூள், சீரகத் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய், வெங்காயம், நெய், சமையல் எண்ணெய், தயிர், உப்பு, தண்ணீர்.
மட்டன் சமைக்க: ஒரு பிரஷர் குக்கரில் 1 மேசைக்கரண்டி சமையல் எண்ணெய் ஊற்றி, அதில் பிரியாணி இலை, 1 பட்டை, 3 ஏலக்காய், 6 கிராம்பு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு நறுக்கிய 2 பெரிய வெங்காயம் சேர்த்து, அதை நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் பொன் நிறமாக மாறியதும், அதில் துண்டுகளை போட்டு கிளறி விட வேண்டும்.
பின்னர் அதனுடன், 3/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு போட்டு மற்றும் மட்டன் வேக வைக்க தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து, 5 முதல் 6 விசில் விட வேண்டும். கறியின் பதத்திற்கு ஏற்றவாறு கூடுதல் விசில் விட்டாலும் தவறில்லை.
பருப்பு, கோதுமை ரவை வேகவைத்தல்: 1/2 கப் உளுத்தம் பருப்பு, 1 கப் கோதுமை ரவை மற்றும் அதனுடன் 1/2 கப் கடலை பருப்பு சேர்த்து 2 முதல் 3 மணி நேரம் ஊர வைக்க வேண்டும். பிறகு ஒரு பிரஷர் குக்கரில் ஊர் வைத்த அனைத்தையும் சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, முழு மிளகு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 முதல் 4 விசில் விட்டு நன்கு வேக வைக்க வேண்டும். பிறகு, வேக வைத்த பருப்பு, கோதுமை ரவை ஆகியவற்றை நன்கு மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மட்டன் ஹலீம்: ஒரு அடி கெட்டியான பாத்திரத்தில், 3 முதல் 4 மேசைக்கரண்டி நெய் ஊற்றி அதில் வேகவைத்த மட்டன் துண்டுகளை கையால் உதிர்த்து சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் மட்டன் வேக வைத்த தண்ணீரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதோடு 1/2 தேக்கரண்டி மிளகாய்த் தூள், 1 தேக்கரண்டி தனியா தூள், 1 தேக்கரண்டி சீரக தூள், 1/2 தேக்கரண்டி கரம் மசாலா ஆகியவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதை எல்லாம் நன்றாக் கிண்டிவிட்டு, 2 நறுக்கியது பச்சை மிளகாய், ஒரு கை அளவிற்கு கொத்த மல்லி இலை, ஒரு கை அளவிற்கு புதினா, சிறிதளவு தண்ணீர் மற்றும் 1 கப் தயிர் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, அடுப்பை மிதமான அளவில் வைத்து 20 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர், மசித்து வைத்துள்ள கோதுமை ரவை, பருப்பு கலவையை மட்டனுடன் சேர்த்து, உப்பு சரிபார்த்து 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். பின்னர், அனைத்தும் ஹல்வாவை போல் ஒன்று சேர்ந்து வரும் வரை அவ்வப்போது கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். இறுதியாக அலங்கரிக்க பொறித்த வெங்காயம் மற்றும் முத்திரி ஆகியவற்றை சேர்த்து, தாராளமாக நெய் சேர்த்தால் போதும் ஹைதராபாத் ஹலீம் உங்கள் உள்ளங்கையில் இருக்கும்.
குறிப்பு: மட்டன் அல்லது பீஃப் வாங்கும் போது எலும்புடன் ஒட்டியுள்ள கறியை வேகவைத்து, எழும்பில் இருந்து கறியை பிரித்தெடுத்து சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும். வேலை சுலபமாக இருக்க வேண்டும் என்பதற்காக, தனிக்கறி பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரமலான் ஸ்பெஷல்.. வீட்டிலேயே மணமணக்கும் சுவையான நோன்பு கஞ்சி செய்வது எப்படி?