தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றும், நவ திருப்பதிகளில் குருவுக்கு அதிபதியாகவும் விளங்குவது ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயில். இங்கு மூலவர் ஆதிநாதர் தாயார்கள் ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி, இத்திருத்தலத்தில் ஸ்வாமி நம்மாழ்வார் திரு அவதாரம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த கோயிலில் மார்கழி திரு அத்யண உற்சவம் (பகல் பத்து இராப்பத்து) டிசம்பர் 31 ஆம் தேதி ஆரம்பித்து 21 தினங்களாக வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் சிறப்பாக காலையிலும், மாலையிலும் உற்சவர் பொலிந்து நின்ற பிரான் மற்றும் சுவாமி நம்மாழ்வார் ஆகியோருக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தரிசனம் செய்யப்படும்.
இந்நிலையில் இராப்பத்து உற்சவத்தின் 8ஆம் நாளான இன்று சிறப்பு நிகழ்ச்சியாக வேடுபறி வைபவம் கோயில் முன்பு நடைபெற்றது. இதில் சுவாமி அழகிய நம்பியாக ஒரு கையில் தங்க கவசம், ஒரு கையில் சாட்டை, தலையில் கொண்டை, மார்பில் காசு மாலை, செண்பக மாலை, கல் பதித்த ஆபரணம், மலர் மாலைகள் அணிந்து தங்க குதிரை வாகனத்தில் ஏழுந்தருளினார். அதேபோல் திருமங்கை ஆழ்வார் கை கூப்பிய நிலையில் தோளுக்கினியானில் ஏழுந்தருளினார். இந்த நிகழ்ச்சியின் போது மாட வீதிகளில் வலம் வந்த பெருமாள் மற்றும் திருமங்கை ஆழ்வார், ஓடிவர மற்றும் நிற்க என கள்வருக்கு பயந்தது போல் திருவிளையாடல் நடைபெற்றது.
இதையும் படிங்க: 2000 கிலோ காய்கறி, பழங்கள், இனிப்புகளால் அலங்கரிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயில் நந்தி! பக்தர்கள் தரிசனம்!
சொல்லப்படும் புராணக்கதை: திருமாலுக்கு தொண்டு செய்து தனது செல்வத்தை இழந்தவர் மன்னன் திருமங்கை. இந்நிலையில் பெருமாள் கைங்கரியம் செய்ய நினைத்த அவர் வழிப்பறி கொள்ளையில் இடுபட்டார். இவரை ஆட்கொள்ள விரும்பிய பெருமாள் வழிப்போக்கனாக வந்து தன் செல்வத்தை பறிகொடுக்கும் வேடுபறி வைபவம் நடந்தது.
வந்தது பெருமாளே என்று உணர்ந்து தன் கைகுப்பியபடி திருமங்கை ஆழ்வார், பெருமாள் முன் பணிந்து இருந்தார். இந்நிகழ்ச்சி புராணமாக அரையர் மற்றும் அர்ச்சகரால் பாடப் பெற்றது. பின்னர் பெருமாளிடம் தான் அபகரித்த தங்க நகைகளை ஒப்படைக்க, அதற்கு பெருமாள் பெற்றுக் கொண்டதற்கு பட்டோலை எழுத ஆழ்வாரிடம் தரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இவ்வாறு எழுந்தருளிய பெருமாள் மற்றும் ஆழ்வாருக்கு ஆழ்வார் திருநகரி ஜீயர், திருவாய் மொழிபிள்ளை சுவாமிகள் மற்றும் பிரபந்த கோஷ்டியார் சிறிய திருமடல் பாடியபடி கோயிலின் உள் அழைத்து சென்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த வேடுபறி உற்சவம் ஜீயர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.