ஐதராபாத்: மேற்கு வங்கம் மாநிலத்தில் ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த டிராம் சேவையை நிறுத்தி மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாநில தலைநகரான கொல்கத்தாவில் வசிக்கும் மக்களின் மலிவு விலை போக்குவரத்தாகவும் நாட்டின் மிக பழமையான பொது போக்குவரத்து சேவையாகவும் காணப்படும் டிராம் சேவை நிறுத்தப்படுவது அம்மாநில மக்களிடையே அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
நூற்றாண்டு கால சேவை:
இந்திய சுதந்திரத்திற்கு முன் இருந்தே நாட்டில் டிராம் சேவைகள் நடைமுறையில் உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பொது போக்குவரத்து முறையை எளிமைப்படுத்தும் வகையில் முக்கிய நகரங்களான டெல்லி, அப்போதைய பம்பாய் (தற்போது மும்பை), மெட்ராஸ் (தற்போது சென்னை), போன்ற பெருநகரங்களிலும், நாசிக் அல்லது பாவ்நகர் போன்ற சிறுநகரங்களில் தேவைக்கேற்பவும் இயக்கப்பட்டன.
அதேபோன்று கொல்கத்தா நகர்புற போக்குவரத்தை கட்டுக்குள் கொண்டு வர ஏறத்தாழ 151 ஆண்டுகளுக்கு முன்னர் டிராம் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. சரியாக 1873ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் முறையாக கொல்கத்தா நகரில் டிராம் சேவை கொண்டு வரப்பட்டது.
பொது போக்குவரத்தில் ஏற்பட்ட மாற்றம்:
குதிரை வண்டிகள் மட்டுமே அப்போது பெரும்பாலும் இயங்கிக் கொண்டு இருந்த காலத்தில், அன்றாட மக்களின் பொது போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த டிராம் சேவை அறிமுகப்படுத்தப்பட்டன. மேற்கு வங்கத்தின் சீல்டா மற்றும் அர்மீனியன் காட் இடையே ஹூக்ளி நதி குறுக்கே 3.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் டிராம் சேவை இயக்கப்பட்டது.
இருப்பினும், தொடக்கத்தில் ஏற்பட்ட பல்வேறு பொருளாதார மற்றும் போக்குவரத்து நிர்வாக சிக்கல் காரணமாக டிராம் சேவை சிறிது நாட்களிலேயே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 1880 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் டிராம் சேவை இயக்கப்பட்டன. இந்த முறை சீல்டா - பாவ்பஜார் வரை டல்ஹ்வுசி சதுக்கம் முதல் அர்மீனியன் கட் வரை இயக்கப்பட்டது.
கல்கட்டா டிராம்வேஸ் கம்பெனி உதயம்:
அதைத் தொடர்ந்து 1880 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் தேதி கல்கட்டா டிராம்வேஸ் கம்பெனி தொடங்கப்பட்டு அது லண்டனில் பதிவும் செய்யப்பட்டது. இப்படித் தான் கொல்கத்தா டிராம் சேவையின் வரலாறு அறியப்படுகிறது. மக்களின் தொடர் வரவேற்பு காரணமாக நீண்டு கொண்டே போன டிராம் சேவை ஹூக்ளி நதி வழியாக ஹவுரா வரை விரிவுபடுத்தப்பட்டது.
தொடர்ந்து 1900ஆம் ஆண்டுகளில் டிராம் சேவை முற்றிலும் மின்சார மயமாக்கப்பட்டது. மெல்ல மெல்ல விரிவாக்கம் கண்ட கொல்கத்தா டிராம் சேவை இறுதியாக 70.4 கிலோ மீட்டர் தூரம் வரை 1969 ஆம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டது. தொடர்ந்து 1982ஆம் ஆண்டு மரத்தால் செய்யப்பட்ட கோச்கள் மாற்றப்பட்டு முதல் முறையாக ஸ்டீல் கோச்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
டிராம் சேவையில் ஏற்பட்ட மாற்றங்கள்:
அதைத் தொடர்ந்து ஸ்டீல் அல்லாத பாலிகார்போனேட் (polycarbonate) டிராம்கள் 2008ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தட்டும் கடைசியாக 2013 ஆம் ஆண்டு இரட்டை கோச்கள் ஒன்றாக மாற்றியமைக்கப்பட்டு அதில் குளிர்சாதன வசதிகள் கொண்டு வரப்பட்டன. இப்படி டிராம் சேவை தொடங்கிய 151 ஆண்டுகளில் அந்தந்த காலக்கட்டங்களுக்கு ஏற்ப டிராம் வசதிகள் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அந்தந்த காலங்களில் மேற்கு வங்க மாநிலத்தை ஆட்சி செய்த காங்கிரஸ், இடது முன்னணி திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளே டிராம் சேவையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளன. மெல்ல விரிவாக்கம் செய்யப்பட்ட டிராம் சேவைகள் மாநிலத்தின் தெற்கு புறநகர் பகுதி அல்லது கிழக்கு கொல்கத்தா வரை நீண்டு கொண்டே சென்றது.
திரைப்படங்களில் டிராம்கள்:
மெல்ல சினிமாவில் தோன்றிய டிராம், அப்போதைய காதல் பாட்டுகள் மற்றும் முக்கிய காட்சிகளை எடுக்க சிறந்த இடமாக காணப்பட்டது. 1963 ஆம் ஆண்டு சத்யஜித் ரே கதையில் வெளியான மகாநகர் படம் முதல் இயக்குநர் ரித்விக் கடாக்கின் Theke Paliye என வெளியான படங்கள் மக்களிடையே டிராம் பயணத்தின் மீதான் ஈர்ப்பை அதிகப்படுத்தியது.
தொடர்ந்து 1971ல் வெளியான இன்டர்வியூ, 72ல் வெளிவந்த கல்கட்டா, 1973ல் பதாதிக் என பல படங்களில் பாமர மற்றும் நடுத்தர மக்களின் போக்குவரத்து பிரச்சினைகளை டிராம் சேவையை கொண்டு தீர்ப்பது குறித்து காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்தன. பாலிவுட் இயக்குநர்களை தாண்டி தமிழக இயக்குநர் மணிரத்னம் கூட 2004ஆம் ஆண்டு அபிஷேக் பச்சன், அஜெய் தேவ்கான் ஆகியோரை வைத்து எடுத்த யுவா (Yuva) என்கிற பாலிவுட் திரைப்படத்தில் கொல்கத்தா டிராம் சேவை குறித்து காட்சிப்படுத்தி இருப்பார்.
மணிரத்னம் படத்திலும் டிராம்:
சினிமா மட்டுமின்றி மக்களின் அன்றாட பொது போக்குவரத்தில் இன்றி அமையாத ஒன்றாக மாறியது கொல்கத்தா டிராம் சேவை. இப்படி மக்களின் அன்றாட பொது போக்குவரத்தில் முக்கியத்தக்க ஒன்றாக இருந்த டிராம் சேவையை திடீரென நிறுத்தப் போவதாக மம்தா பானர்ஜியின் அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் சினேசிஸ் சக்ரவர்த்தி அறிவித்தது பேரிடியாக இருந்தது.
இதுகுறித்து பேசிய அவர், "கொல்கத்தாவின் பரப்பளவில் 6 சதவீதம் மட்டுமே சாலைகள் உள்ளன. வாகனப் போக்குவரத்து அதிகரிப்பால், டிராம்கள் அதே வழித்தடங்களில் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. டிராம் சேவைகள் அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் இடையூறுகளுக்கு மட்டுமே வழிவகுக்கின்றன.
மாநில அரசு கூறுவது என்ன?:
பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய, டிராம் சேவைகளை திரும்பப் பெறுவது போன்ற சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். மைதானத்திற்கும் - எஸ்பிளனேடுக்கும் இடையே மட்டும் டிராம் சேவையை தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.
ஆனால் சர்வதேச பொது போக்குவரத்து ஆணையம் உள்ளிட்ட உலகளாவிய அமைப்புகள் மெட்ரோ போன்ற பொது போக்குவரத்து சேவைக்கு இணையாக டிராம் சேவைகளை கருதுகின்றன. மேலும், தற்போதைய காரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் உலகளாவிய ஒப்பந்தத்தில் பொது போக்குவரத்து துறையில் மின்மயமாக்கப்பட்ட டிராம் சேவைகள் அளப்பறிய பங்கு வகிப்பதாக கூறப்படுகின்றன.
டிராம் பயனர்கள் சங்கம் கோரிக்கை:
மேலும், கொல்கத்தா போன்ற அதிக வாகன மாசுபாடு கொண்ட நகரங்களின் பொது போக்குவரத்தில் மின்சார டிராம்களின் பங்களிப்பு காரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த முக்கியத்தக்க வகையில் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. கொல்கத்தா டிராம் பயணர்கள் சங்கம் மற்றும் இதர பாரம்பரிய ஆர்வலர்கள், கொல்கத்தாவில் இருந்து டிராம்களை படிப்படியாக நிறுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து பேசிய கொல்கத்தா டிராம் பயனர்கள் சங்க உறுப்பினரான சக்னிக் குப்தா, "இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறது, கடந்த ஆண்டு டிசம்பரில், கொல்கத்தாவில் டிராம்களை புதுப்பிக்கவும் பராமரிக்கவும் தனியார் பொது மற்றும் கூட்டாண்மை மாதிரியை நீதிமன்றம் முன்மொழிந்தது.
பசுமை நகரத்தின் ஆதாரங்களில் டிராம் போக்குவரத்து:
டிராம்களின் சராசரி வேகம் மணிக்கு 25 கிலோ மீட்டர் ஆகும். இது தற்போது டிராம்கள் இல்லாத கொல்கத்தாவின் நெரிசலான சாலைகளில் செல்லும் வாகனங்களின் சராசரி வேகத்தை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உள்ளது. மெதுவாக செல்லும் டிராம்கள் பயணிகளுக்கு போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமைச்சர் கூறுவது தவறு.
உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நகரங்கள் பசுமையான, தூய்மையான மற்றும் மலிவு விலையில் நகர்ப்புற போக்குவரத்தை தேர்வு செய்யும் நேரத்தில், இந்த அரசாங்கம் டிராம் சேவையை அடியோடு நிறுத்த முயற்சிக்கிறது" என்று கூறினார். சங்கத்தின் மற்ற உறுப்பினர்களும், கொல்கத்தா நகர மக்களும் நகரில் டிராம் சேவை நிறுத்துவது குறித்த மம்தா பானர்ஜியின் முடிவுக்கு தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் சம்பவம்:
நகரத்தில் உள்ள போக்குவரத்து நெரிசல்களையும், மெதுவாக இயக்கப்பட்டும் டிராம் சேவைகளையும் சுட்டிக்காட்டி, நகரின் முக்கிய இடங்களில் உள்ள டிராம் டிப்போக்களை தனியாருக்கு குத்தகை அல்லது விற்பனை செய்யவும், டிராம் போக்குவரத்து துறையின் முக்கிய சொத்துகளை தனியாருக்கு தாரை வார்ப்பது மற்றும் தரமான ஸ்டீல் டிராக்குகள் உள்ளிட்ட டிராம் பொருட்களை விற்கவும் அரசு திட்டமிட்டு உள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
கொல்கத்தா ஆர்ஜி கர் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு நகர்ப்புற மேற்கு வங்கத்தை முற்றிலுமாக கிளர்ந்தெழச் செய்துள்ளது. பொது மக்கள் அவர்களின் உறவினர்கள், மருத்துவர்கள் என பலர் வெளியே வந்து தெருக்களில் ஆளும் ஆரசுக்கு எதிராக தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நுற்றாண்டு பழமை வாய்ந்த டிராம் சேவை மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு நிறுத்த முடிவு செய்து இருப்பது அரசின் மீதான மக்களின் அவநம்பிக்கை மற்றும் கோபத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும் எனக் கூறப்படுகிறது. மாநில அரசின் இந்த செயல் ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் போராட்டத்திற்கு மேலும் எரிபொருளை சேர்க்கும் வகையில் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: ஆட்சி மாறினாலும் உறவு மாறாது.. உலகிற்கு உணர்த்தும் இந்தியா - இலங்கை..! - India Sri Lanka Relations