டெல்லி: அண்டை நாடுகளின் வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பு அளிக்கும் இந்தியாவின் மற்றொரு செயல்பாடாக, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை முழுமையாக சீரமைக்க 61 புள்ளி 5 மில்லியன் அமெரிக்கா டாலர் நிதி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இலங்கையின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் நிமல் ஸ்ரீபலா டி சில்வா மற்றும் இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா ஆகியோருடனான அலோசனையில் இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, காங்கேசன்துறையில் ராட்சத அலைகள், நீரோட்டங்கள் மற்றும் புயல்கள் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கக் கூடிய நிரந்தர அமைப்பு கட்டப்படும் என முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், துறைமுக பகுதியில் 30 மீட்டர் ஆழத்திற்கு கடலில் தோண்டப்படும், வணிக அல்லது போக்குவரத்து கப்பல்கள் வந்து செல்லவும், நங்கூரமிடவும் ஏதுவாக அமைக்கப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது. இந்தியா - இலங்கை இடையே பிராந்திய ரீதியிலான ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவை வலுப்படுத்தவும், அதிகளவிலான இந்திய சுற்றுலா பயணிகளை கவருவதற்கு தேவையான் அனைத்த் உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக ஆலோசனைக் கூட்டத்தின் போது இலங்கைக்கான இந்திய தூதர் கூறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இந்தியா சுற்றுலாப் பயணிகளின் முதன்மையான சுற்றுலாத் தளமாக இலங்கையை மத்திய அரசு நியமித்து உள்ளதாக தூதர் தெரிவித்ததாக கூறப்பட்டு உள்ளது. இதையடுத்து, விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறைகளில் இந்திய அரசு வழங்கிய ஆதரவிற்கு இலங்கை அரசு மற்றும் தனது அமைச்சகம் சார்பாக நன்றியை அமைச்சர் டி சில்வா தெரிவித்தார்.
குறிப்பாக சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே விமான சேவை தொடங்கப்பட்டதை அமைச்சர் டி சில்வா வெகுவாக பாராட்டினார். மேலும், இந்திய சுற்றுலா பயணிகளின் வசதிக்காக காங்கேசன்துறை துறைமுகத்தில் 600 மில்லியன் இலங்கை ரூபாய் மதிப்பில் புதிய முனையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் டி சில்வா தெரிவித்தார்.
கடந்த 9 மாதங்களில் பெருவாரியான இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு சுற்றுலா சென்று உள்ளனர். இலங்கையில் வடக்கு மாகாணத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகம் ஏறத்தாழ 16 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக உள்ளது. புதுச்சேரியின், காரைக்கால் துறைமுகத்தில் இருந்து ஏறத்தாழ 56 நாட்டிக்கல் மைல் தொலைவில் காங்கேசன்துறை துறைமுகம் உள்ளது. அதேநேரம் தரைவழியாக துறைமுகத்தை அடைய ஏறத்தாழ 23 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க வேண்டும்.
நீண்ட வரலாறு கொண்ட காங்கேசன்துறை துறைமுகம், 1950 ஆண்டுகளில் நல்ல செழிப்பான மற்றும் வளமையான துறைமுகமாக காணப்பட்டு உள்ளது. குறிப்பாக காங்கேசன்துறையில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலை காரணமாக நாட்டின் முக்கிய வணிக கப்பல்கள் வந்து செல்லும் பகுதியாக துறைமுகம் காணப்பட்டு உள்ளது.
உள்நாட்டு போர் காரணமாக இலங்கை கப்பற்படை கட்டுப்பாட்டுக்கு காங்கேசன்துறை துறைமுகம் சென்ற பின், அதன் நிலை முற்றிலுமாக மாறியதாக சொல்லப்படுகிறது. தற்போது இந்தியா - இலங்கை இடையே சுற்றுலாத் துறையை வளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பல்வேறு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த இலங்கை அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 400 மில்லியன் இலங்கை ரூபாய் முதலீட்டில் காங்கேசன்துறை துறைமுகத்தை சீரமைக்கவும், இலங்கை - இந்தியா இடையிலான போக்குவரத்து மற்றும் சரக்கு கப்பல்கள் வந்து செல்ல ஏதுவாக முனையம் அமைகக்வும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளன.
இந்தியா - இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்குவது இரு நாடுகளுக்கும் இடையே, குறிப்பாக வட இலங்கையில் சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சரக்கு கப்பல் முனையத்தையும் தாண்டி காங்கேசன்துறை துறைமுகம் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு, சுங்கத்துறை, குடியேற்றும் மற்றும் குடிவரவு, அதிநவீன உபகரணங்கள், கூட்டணித்துவ செயல்பாடு உள்ளிட்டவைகளை நிறுவ முடியும்.
இலங்கையின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, காங்கேசன்துறை துறைமுகத்தில் தேவையான வசதிகளை விரிவுபடுத்துவதில் இலங்கை கடற்படையும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே காங்கேசன்துறை முகப்பு பக்கத்தில் 8 மீட்டர் ஆழத்திற்கு உள்ள மண் வெளியேற்றப்பட்டு சரக்க்கு கப்பல்களை கையாள தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விரைவில் இந்தியா - இலங்கையில் இடையிலான சரக்கு முனையம் மற்றும் கப்பல் போக்குவரத்து தேவையான அனைத்து பணிகளும் முன்னெடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது.
நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு இடையே 110 கிலோ மீட்டர் பயண தூரத்தை ஏறத்தாழ முன்றரை மணி நேரத்தில் இந்த கப்பல் கடந்து சென்றடைந்தது. இந்தியா - இலங்கை இடையிலான இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு ஏதுவாக இந்த கப்பல் சேவை அமைந்தது. மேலும் இந்த கப்பலில் பயணிகள் ஏறத்தாழ 50 கிலோ வரை தங்களுடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதால் இரு நாடுகளுக்கு இடையே சிறு வர்த்தக முனையமாகவும் இந்த கப்பல் போக்குவரத்து அமைக்கிறது.
காங்கேசன்துறை துறைமுகத்தை முழுமையாக சீரமைக்க 61 புள்ளி 5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி வழங்க முன்வந்து இருப்பது அண்டை நாடுகளுக்கு முதன்மை முக்கியத்துவம் என்ற கொள்கைக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதராக பதவியேற்ற சந்தோஷ் ஜா, இந்த ஆண்டு பிப்ரவரியில் வட மாகாணத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தின் இடையே அவர் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்தியா - மியான்மர் இடையேயான சுதந்திர இயக்க ஒப்பந்தம் - நன்மைகளும்.. சவால்களும்!