கோயிலில் கொடுக்கும் புளியோதரை மட்டும் எப்படி இவ்வளவு சுவையாக இருக்கிறது என்று சாப்பிட்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக யோசித்திருப்பார்கள். அதில் நீங்களும் ஒருவரா? அப்ப, ஒரு முறை வீட்டில் கோயில் ஸ்டைல் புளியோதரை செய்து பாருங்கள். கோயில் ஸ்டைல் புளியோதரை எப்படி செய்வது? அதற்கு தேவையான பொருட்கள் என்ன? என்பதை பார்க்கலாம் வாங்க..
புளியோதரை பொடி அரைக்க தேவையான பொருட்கள்:
- மிளகு - 1 டீஸ்பூன்
- கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1டீஸ்பூன்
- மல்லி (தன்யா) - 1 டீஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
- எள் - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- காய்ந்த மிளாகாய் - 5
- கறிவேப்பிலை - 1 கொத்து
புளியோதரை பொடி செய்முறை:
- முதலில், ஒரு அகல பாத்திரத்தில் புளியோதரைக்கு வடித்து அல்லது குக்கரில் வைத்த சாதத்தை சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றி கிளறி தனியாக வைத்து விடுங்கள் (இப்படி செய்வதால், சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்)
- இப்போது, புளியோதரைக்கு வறுத்து அரைக்க கூடிய பொடி எப்படி செய்வது என பார்ப்போம். இதற்கு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், மிளகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மல்லி, கடுகு, வெந்தயம், எள், சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
- மிதமான தீயில் அனைத்தும் பொன்னிறமாகும் வரை வறுத்து அடுப்பை அணைக்கவும். பின், ஆற வைத்து மிக்ஸி ஜாரில் நைசாக அரைத்தால் புளியோதரை பொடி தயார்.
இப்போது, புளியோதரைக்கான புளி கரைசல் செய்யலாம்..முதலில், புளியை சுடுநீரில் ஊற வைத்து கரைத்துக்கொள்ளுங்கள். அடுத்து, அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, சூடானதும், தேவையான அளவு நல்லெண்ணெய், 1 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 டீஸ்பூன் கடலை பருப்பு, 1 கைப்பிடி வேர்க்கடலை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
- பின் கிள்ளி வைத்த 6 காய்ந்த மிளகாய், 1 கொத்து கறிவேப்பிலை, 1/2 டீஸ்பூன் பெருங்காய தூளை 2 டீஸ்பூன் தண்ணீரில் கலந்து சேர்த்துக்கொள்ளவும். பின், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், புளி தண்ணீர் மற்றும் தேவையான அளவு கல் உப்பு சேர்க்கவும்.
- புளி தண்ணீர் தேன் பதத்திற்கு வரும் வரை மிதமான தீயில் கொதிக்க விடுங்கள். 5 நிமிடங்களுக்கு பின், நாம் அரைத்து வைத்த புளியோதரை பொடியில் இருந்து 1 டீஸ்பூன் சேர்த்து கலந்து விடுங்கள். பின், எண்ணெய் நன்கு பிரிந்து வந்ததும், அடுப்பை அணைத்தால் புளி கரைசல் தயார்.
- இப்போது, நாம் எடுத்து வைத்த சாதத்தில் 2 டீஸ்பூன் புளியோதரை பொடி மற்றும் தேவையான அளவு புளி கரைசலை சேர்த்து நன்கு கிளறினால், கோயில் புளியோதரை ரெடி..
குறிப்பு: புளியோதரை பொடி மற்றும் புளி கரைசலை காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்தால் 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.