சென்னை: பளப்பளப்பான, ஒளிரும் சருமம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. கண்ணாடி போன்ற சருமத்தையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். ஆனால், சுற்றுச்சூழல் மாசுபாடு, வெயில் மற்றும் பருவகால மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் சருமம் பொலிவிழக்கின்றன. பொலிவிழப்பது மட்டுமல்லாமல் முகப்பரு, வறண்ட சருமம், கரும்புள்ளிகள், தோல் சிவந்து போதல், வெடிப்புகள், சருமத்துளைகள் அதிகமாவது (Open Pores), முகச்சுருக்கம், முக வீக்கம் (Puffy Face) ஆகியவையும் ஏற்படுகின்றன.
இவற்றை சரி செய்ய வேண்டும் என்ற நோக்கில், தற்போது பெரும்பாலானோர் ஒவ்வொரு சரும பிரச்சினைக்கும் பியூட்டி பார்லர்களுக்குச் சென்று ஏராளமான கெமிக்கல் நிறைந்த அழகு சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர். இனிமேல் அப்படி செய்ய தேவையில்லை. பணத்தையும் வீணடிக்க வேண்டாம். வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களைக் கொண்டு, ஒரே ஒரு ஃபேஸ் மாஸ்க் மூலம் மேற்கூறிய அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்யலாம்.
ஃபேஸ் மாஸ்க் தயார் செய்ய தேவையானவை:
கொரகொரப்பாக அரைத்த காபி தூள் - 2 ஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை - 1 1/2 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 1 ஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்
பால் - 1 ஸ்பூன்
காபி ஃபேஸ் மாஸ்க் செய்வது எப்படி?
ஒரு கிண்ணத்தில் மேற்கூறிய பொருட்களை ஒன்றாக போட்டு நன்றாக கலந்த பின், முகத்தில் சிறிது ஸ்க்ரப் செய்து தடவ வேண்டும். பின் 20 நிமிடங்கள் கழித்து, முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை கை, கால்களில் பாடி ஸ்க்ரப்பாகவும் (Body Scrub) பயன்படுத்தலாம்.
காபி மாஸ்க் பயன்படுத்துவதால் கிடைக்கும் பயன்கள்:
- முதலில் காபி மாஸ்க்கை முகத்தில் போடும் போது சிறிது ஸ்க்ரப் செய்வதால், முக வீக்கம் (Puffy Face) சரியாகும். மேலும், சருமம் மிருதுவாகவும், பொலிவாகவும் மாறும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
- காபி தூளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்கி, முகத்தை பொலிவாக்கும்.
- இந்த காபி மாஸ்க்கை தொடர்ந்து பயன்படுத்தி வர கண்களைச் சுற்றி உள்ள கருவளையமும், முகப்பருக்களும் படிப்படியாக மறையும்.
- நாட்டுச்சர்க்கரையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் கிளைகாலிக் அமிலம் முகத்தை பளபளப்பாக்கும். மேலும், சரும வறட்சியால் தோல் உரிதல் உள்ளிட்ட பிரச்சினைகளையும் சரி செய்து சருமத்தை மிருதுவாகவும், இளமையாகவும் மாற்றும்.
- ஆலிவ் எண்ணெய் இயற்கையான மாய்ஸ்சுரைசர் போல செயல்பட்டு சரும வறட்சியை நீக்கும். இதில் உள்ள வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும், ஆலிவ் எண்ணெயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பாக்டீரியாக்களிடம் இருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன.
- தேனில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் முகப்பருக்கள் ஏற்படுவதை குறைக்கின்றன. மேலும், முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, முகச்சுருக்கம் ஏற்படுவதை தடுப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
- பாலில் உள்ள வைட்டமின் ஏ வறண்ட சருமத்தை மென்மையாக்குகிறது. இதில் உள்ள வைட்டமின் டி, முகச்சுருக்கத்தையும் நீக்கி, சருமத்தை நெகிழ்வுத் தன்மையாக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இயற்கையான பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டாலும், சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். எனவே, பேட்ச் டெஸ்ட் (patch test) செய்த பின் இதனை பயன்படுத்துவது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.
பேட்ச் டெஸ்ட் (patch test): எந்த ஒரு பேஸ் மாஸ்க், பேஸ் க்ரீம், ஜெல் ஆகியவற்றை பயன்படுத்தும் முன், பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது. அழகு சாதனங்கள் நமது சருமத்திற்கு செட் ஆகிறதா? அல்லது பாதிப்பை ஏற்படுத்துகிறதா? என தெரிந்து கொள்வதற்காக பேட்ச் டெஸ்ட் செய்யப்படுகிறது. இதற்கு நாம் பயன்படுத்தவிருக்கும் மாஸ்க்அல்லது க்ரீம் அல்லது ஜெல்லை காதின் பின்புறம் சிறிது தடவ வேண்டும். அப்பகுதியில் ஏதேனும் அரிப்பு, தோல் வீங்குதல் அல்லது சிவத்தல் போன்றவை ஏற்பட்டால் அந்த மாஸ்க் அல்லது க்ரீம் அல்லது ஜெல் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதைப் பயன்படுத்தக் கூடாது. ஏதும் ஏற்படவில்லை எனில், நீங்கள் அதை தாராளமாக பயன்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்