இலங்கை: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த நான்காம் தேதி மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்று காங்கேசன் கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றச்சாட்டை முன்வைத்து இரண்டு விசைப்படகையும் பரிமுதல் செய்து அதிலிருந்த 23 மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (பிப்.16) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதில் 20 மீனவர்களை மட்டும் விடுதலை செய்து படகின் ஓட்டுநர்கள் இரண்டு பேருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனையும், ஒருவர் 2வது முறையாக எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து ஊர் காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை அடுத்து, ராமேஸ்வரம் மீனவர்கள் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (பிப்.17) போராட்டத்தை ஈடுபட்டது மட்டுமல்லாமல் இன்று (பிப்.18) ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் படகுகளை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதோடு தங்களுடைய படகுகளில் கருப்பு கொடி கட்டி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவைப் புறக்கணிக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் கிராமிய கடல் தொழில் அமைப்புகளின் சார்பில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்பொழுது அவர்கள் கூறுகையில், "3500க்கும் மேற்பட்டோர் கச்சத்தீவு திருவிழாவிற்காக வருவதற்காகப் பதிவு செய்திருக்கும் நிலையில் மீனவர்கள் கைதான சம்பவத்தை வைத்து கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிப்போம் எனக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கச்சத்தீவு திருவிழாவிற்கும் எல்லை தாண்டி வரும் மீனவர்கள் பிரச்சனைக்கும் சம்பந்தமில்லை. எங்கள் நாட்டு மீனவர்கள் கச்சத்தீவிற்கு வருவார்கள் அதே போன்று இந்தியா மீனவர்களும் வந்து திருவிழாவைக் கொண்டாடிச் செல்லுங்கள். மதத்தை வைத்து அரசியல் செய்யவேண்டாம்.
மீனவர்களை விட்டால் தான் நாங்கள் கச்சத்தீவு திருவிழாவிற்கு வருவோம் என வேண்டுகோள் வைப்பதெல்லாம் வேண்டாம். இலங்கை அரசும், இலங்கை நீதித் துறையும் மீனவர்களை விடுதலை செய்யச் சொல்லி இந்தியா கோரிக்கை வைத்தால் அதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
மீண்டும், இது போன்று தொடர்ந்து எல்லை தாண்டி வந்தால் அவர்களைக் கட்டாயமாகக் கைது செய்ய வேண்டும். இந்தியக் கடற்படை நினைத்தால் இந்திய மீனவர்களின் படகு இலங்கை எல்லைக்குள் வராது. தற்போது விதித்துள்ள ஆறு மாத தண்டனை என்பதை, ஐந்து வருடமாக மாற்றி தண்டனையை நீடிக்க வேண்டும். எங்கள் வளத்தை அழிக்கக் கூடாது.
எல்லை தாண்டி வரும் படகுகளை நாங்களே கடலில் சென்று எறிப்போம். எங்களை அரசு மோத விட்டுப் பார்க்கக் கூடாது. இந்த சம்பவத்தைக் கண்டித்து வரும் 20ஆம் தேதி காலை 10 மணிக்கு இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளோம்" என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருக்கு சிறை தண்டனை; படகுகளில் கருப்பு கொடி ஏற்றி வேலைநிறுத்தப் போராட்டம்!