வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தனது நிர்வாகத்தின் கீழ் முக்கிய பதவிகளில் ஆட்களை நியமிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தேர்தலுக்கு முந்தைய பிரச்சாரத்தில் தனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு ட்ரம்ப் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் ட்ரம்ப் இதுவரை நியமித்துள்ள முக்கிய நபர்களை குறித்து பார்க்கலாம்.
வெளியுறவு அமைச்சர்: மார்கோ ரூபியோ
ட்ரம்ப்பின் 2.0 புதிய நிர்வாகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சராக 53 வயதான மார்கோ ரூபியோ அறிவிக்கப்பட்டுள்ளார். ரூபியோ கடந்த காலங்களில் சீனா, கியூபா மற்றும் ஈரான் நாடுகளின் மீதான வெளியுறவு செயல்பாட்டில் சிறப்பாக பணியாற்றியுள்ளார். தற்போது ரூபியோ செனட் புலனாய்வுக் குழுவின் துணைத் தலைவராகவும், வெளியுறவுக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். ட்ரம்ப் இவரை குறித்து வெளியிட்ட அறிக்கையில், '' மார்கோ ரூபியோ அமெரிக்காவின் வலுவான வழக்கறிஞராகவும், நமது நட்பு நாடுகளுக்கு உண்மையான நண்பராகவும் மற்றும் எதிரிகளிடம் இருந்து ஒருபோதும் பின் வாங்காத அச்சமற்ற போர் வீரராகவும் இருப்பார்'' என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசு வழக்கறிஞர்: மாட் கேட்ஸ்
அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் ஆக 42 வயதான மூத்த வழக்கறிஞர் மாட் கேட்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதை பற்றி கூறியுள்ள ட்ரம்ப், '' மாட் கேட்ஸ் எங்கள் எல்லைகளை பாதுகாத்து, குற்றவியல் அமைப்புகளை அகற்றுவார் என்றும் அமெரிக்கர்களிடையே சிதைந்துள்ள நீதித்துறை மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பார்'' என குறிப்பிட்டுள்ளார். மாட் கேட்ஸ் மீதான பாலியல் குற்றசாட்டை ஹவுஸ் எதிக்ஸ் கமிட்டியின் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் மாட் கேட்ஸ் அதனை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
துளசி கபார்ட்: தேசிய உளவுத்துறை இயக்குனர்
தேசிய உளவுத்துறையின் இயக்குநராக 43 வயதான துளசி கபார்ட் பெயரை அறிவித்துள்ளார் ட்ரம்ப். இவர் ஈராக் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கிடையேயான உளவுத்துறை ஆபரேஷன்களில் முக்கிய நபராக இருந்துள்ளார். ட்ரம்ப் இவரை குறித்து வெளியிட்ட அறிக்கையில், '' "துளசி கபார்ட் தனது அச்சமற்ற உணர்வை எங்கள் புலனாய்வு சமூகத்திற்கு கொண்டு வருவார் என்று எனக்குத் தெரியும்" என்று தெரிவித்துள்ளார்.
பீட் ஹெக்சேத்: ராணுவ அமைச்சர்
அமெரிக்காவின் ராணுவ அமைச்சராக முன்னாள் ராணுவ வீரரும், பாக்ஸ் நியூஸ் தொகுப்பாளருமான பீட் ஹெக்சேத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹெக்சேத் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட "The War on Warriors: Behind the Betrayal of the Men Who Keep us Free" என்ற நூலின் ஆசிரியரும் ஆவார். ஆனால், ஹெக்சேத்துக்கு போதிய ராணுவ அனுபவம் இல்லாத சூழலில், அமெரிக்காவின் பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது அந்நாட்டு ராணுவ ராணுவ பென்டகனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டான் ஸ்கவினோ: துணைத் தலைவர்
வெள்ளை மாளிகையில் டிரம்பின் நிர்வாகத்தில் மிக நீண்ட காலம் பணியாற்றிய மற்றும் மிகவும் நம்பகமான உதவியாளர்களில் ஒருவர் டான் ஸ்கவினோ. டிரம்பின் 2024 பிரச்சாரத்திற்கும், ஏற்கனவே 2016 மற்றும் 2020 பிரச்சாரங்களுக்கும் மூத்த ஆலோசகராக இருந்துள்ளார். மேலும், வெள்ளை மாளிகையில் டிரம்பின் சமூக ஊடக கணக்குகளை ஸ்கவினோ இயக்கி வருகிறார். இவர் தற்போது வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு துறை துணைத் தலைவர் மற்றும் ட்ரம்பின் உதவியாளராகவும் இருக்க போகிறார்.
ஜேம்ஸ் பிளேயர்: துணைத் தலைவர்
டிரம்பின் 2024 தேர்தல் பிரச்சாரத்திற்கும், குடியரசுக் கட்சியின் தேசியக் குழுவிற்கும் பிளேயர் அரசியல் இயக்குநராக இருந்தார். தற்போது இவர் சட்டமன்ற, அரசியல் மற்றும் பொது விவகாரங்களுக்கான துணைத் தலைவராகவும், ட்ரம்பின் உதவியாளராகவும் இருப்பார்.
டெய்லர் புடோவிச்: துணைத் தலைவர்
டிரம்ப்பின் மூத்த தேர்தல் பிரச்சார உதவியாளர்களில் ஒருவரான டெய்லர் புடோவிச் தகவல் தொடர்பு மற்றும் பணியாளர்களுக்கான துணைத் தலைவராகவும், அதிபரின் உதவியாளராகவும் இருப்பார். கடந்த முறை ட்ரம்ப்பின் செய்தித் தொடர்பாளராகவும் புடோவிச் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டி நோம்: உள்துறை பாதுகாப்பு செயலர்
சர்ச்சைக்கு பெயர்போன கிறிஸ்டி நோம், அமெரிக்காவின் உள்துறை பாதுகாப்பு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இயற்கை பேரிடர் பணிகள், விமான நிலையங்களில் ரகசிய சேவை மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு ஆகியவற்றை கவனிக்க உள்ளார்.
வில்லியம் மெக்கின்லி: வெள்ளை மாளிகை ஆலோசகர்
ட்ரம்பின் முதல் நிர்வாகத்தின் கீழ் வில்லியம் மெக்கின்லி வெள்ளை மாளிகையின் அமைச்சரவை செயலாளராக இருந்தார். மேலும் 2024 பிரச்சாரத்தின் போது குடியரசுக் கட்சியின் சட்ட ஆலோசகராகவும் இருந்தார். தற்போது, வெள்ளை மாளிகையின் சட்டம் மற்றும் நடவடிக்கைகளில் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜான் ராட்க்ளிஃப்: சிஐஏ இயக்குனர்
ஜான் ராட்க்ளிஃப் டிரம்பின் முதல் பதவிக்காலத்தின் இறுதி ஒன்றரை ஆண்டுகளில் தேசிய உளவுத்துறையின் இயக்குநராக இருந்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலின்போது அமெரிக்க அரசாங்கத்தின் உளவு அமைப்புகளையும் வழிநடத்தினார். தற்போது அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்டீவன் விட்கோஃப்: மத்திய கிழக்கிற்கான சிறப்பு தூதர்
67 வயதான விட்காஃப், ட்ரம்பின் கோல்ஃப் விளையாட்டின் பார்ட்னர் ஆவார். கடந்த செப்.15 ஆம் தேதி ளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில் ட்ரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கி சூடு முயற்சி நடந்தது. அப்போது டிரம்பின் கிளப்பில் இவர்தான் கோல்ஃப் விளையாடி கொண்டிருந்ததாக சொல்லப்பட்டது. தற்போது மத்திய கிழக்கிற்கான சிறப்பு தூதராக ஸ்டீவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மைக் ஹக்கபி: இஸ்ரேலுக்கான தூதர்
மைக் ஹக்கபீ இஸ்ரேலின் உறுதியான பாதுகாவலர் ஆக ட்ரம்ப் நம்புகிறார். அமெரிக்காவின் நட்பு நாடான ஈரான் - ஹமாஸ் இடையே நடந்து வரும் போருக்கு மத்தியில், மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த மைக் அயராது உழைப்பார் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மைக் வால்ட்ஸ்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
அமெரிக்காவில் ஸ்பீல்ட் மற்றும் ராபர்ட் கேட்ஸ் தேசிய பாதுகாப்புத் தலைவர்களாக இருந்தபோது பென்டகனில் கொள்கை ஆலோசகராகவும் இவர் பணியாற்றியுள்ளார். ஆப்கானிஸ்தானில் பல சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ள மைக் வால்ட்ஸ் சீனாவின் பருந்தாகவும் அழைக்கப்படுகிறார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்