கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் (என்பிபி) அனுரா குமார திசாநாயக, சமகி ஜன பாலவேகயா கட்சியின் சஜித் பிரேமதாச ஆகியோரிடையே கடும் போட்டி நிலவிய நிலையில் யாரும் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளை பெறவில்லை. இதையடுத்து இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக 2வது விருப்ப வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இலங்கையின் 9வது அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட அந்நாட்டின் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான சமகி ஜன பாலவேகயா-வின் சஜித் பிரேமதாச மற்றும் இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சியின் (என்பிபி) அனுரா குமார திசாநாயக ஆகிய மூவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.
இதையும் படிங்க:ஈரானில் நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 30 பேர் உயிரிழப்பு!
நேற்று மாலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இலங்கை அதிபர் தேர்தலை பொறுத்தவரை 50 சதவீத வாக்குகளுக்கு மேல் பெறுபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இந்நிலையில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் என்பிபி கட்சியின் அனுரா குமார திசாநாயக 39.52 சதவீத வாக்குகளும், எதிர்க்கட்சித் தலைவரும், சமகி ஜன பலவேகயா கட்சி வேட்பாளருமான சஜித் பிரேமதாச 34.28 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தையும் பெற்றனர்.
முதல் சுற்றில் யாரும் 50 சதவீத வாக்குகளுக்கு மேல் பெறவில்லை. இதையடுத்து இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக 2வது விருப்ப வாக்குகளை எண்ணும் பணி நடைபெறுகிறது.
இலங்கையில் கடந்த 2022ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற முதலாவது அதிபர் தேர்தல் இதுவாகும். இலங்கையின் புதிய அதிபராக யார் தேர்வாகப் போகிறார் என்பதை இலங்கை மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகும் கவனித்து வருகிறது.
2வது விருப்ப வாக்குகள் எண்ணும் நடைமுறை: இலங்கையின், 1981ம் ஆண்டு அதிபர் தேர்தல் சட்டத்தின்படி, எந்தவொரு வேட்பாளரும் செல்லுபடியாகும் வாக்குகளில் பாதிக்கு மேல் பெறாதபோது, தேர்தல் அதிகாரி மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளரை போட்டியில் இருந்து அகற்றுவார். அவ்வாறு போட்டியில் இருந்து நீக்கப்பட்ட வேட்பாளருக்கு வாக்களித்த ஒவ்வொரு வாக்காளரின் இரண்டாவது முன்னுரிமை வாக்கு கணக்கிடப்படும். அந்த வாக்குகள் அதிபர் பதவிக்கான போட்டியில் இருப்பவர்கள் ஏற்கெனவே பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையுடன் சேர்க்கப்படும்.
இதன்படி, தற்போது அனுரா குமார திசாநாயக மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் பெற்றுள்ள வாக்குகளின் எண்ணிக்கையில் 2வது விருப்ப வாக்குகளும் சேர்க்கப்படும். இதில் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளை பெறுபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.