சிங்கப்பூர்: சிங்கப்பூர் விமானப் படையின் F-16 விமானம் விபத்துக்குள்ளானது. தெங்கா விமானத் தளத்தில் பிற்பகல் 12.35 மணிக்கு விமானம் புறப்படும் போது திடீரென ஏற்பட்ட பிரச்சினையால் விபத்து நேரிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் F-16 போர் விமானத்தின் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவசரகால நடைமுறைகளை பயன்படுத்தி விமானத்தில் இருந்து விமானை வெளியேறி உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானி சுயநினைவுடனும் இருப்பதாகவும் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இந்த எதிர்பாராத திடீர் விபத்தில் மற்ற பணியாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் சிங்கப்பூர் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து குறித்து விரிவான முறையில் விசாரணை நடந்து வருவதாக சிங்கப்பூர் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர் விமானம் விபத்து குறித்த கூடுதல் விவரங்களை சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் விமானப் படை விரைவி வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானம், ஒரு விமானி மட்டும் அமரக்கூடிய வகையிலான F-16C என்றும் சிங்கப்பூர் ராணுவத்தில் இந்த வகை F-16 போர் விமானம் 1980 ஆம் ஆண்டு இறுதியில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக 2004 ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி அமெரிக்காவின் அரிசோனாவில் சிங்கப்பூர் விமானப் படையின் எப்-16 விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 25 வயதான விமானி லூ குவாங் ஹான் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரஷ்ய அதிபராக 5வது முறை புதின் பதவியேற்பு! - Russia President Putin Take Oath