இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் சுயேட்சையாக களம் இறங்கி 100க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றினர். இருப்பினும் ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை.
இதனால் ஆட்சி அமைப்பதில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது. பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைவது உறுதியான நிலையில், ராணுவம் மற்றும் இதர கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்ற முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் போராடி வருகிறார். இந்நிலையில், முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியும் கூட்டணியை இறுதி செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் படி ஷெபாஸ் ஷெரிப் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் அசிப் அலி சர்தாரி பாகிஸ்தான் அதிபருக்கான இணை வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அசிப் அலி சர்தாரி இல்லத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ, பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரிப் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் ஆதரவு சுயேட்சை எம்.பிக்கள் 93 தேசிய சட்டமன்றங்களில் வெற்றி கண்ட போதும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் எட்டியுள்ளது. அதேநேரம் ஷெபாஸ் ஷெரிப்பின் கட்சி 75 இடங்களையும், பிலாவில் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களையும் கைப்பற்றி கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
இதையும் படிங்க : பாகிஸ்தானில் புதிய அரசு அமைப்பு? நவாஸ் கட்சியும் - மக்கள் கட்சியும் கூட்டணி ஆட்சி என தகவல்!