மாஸ்கோ: ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 40 வரை உயிரிழந்தனர். மேலும், இந்த தாக்குதலில் 145 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் 'பிக்னிக்' எனும் ராக் இசைக்குழுவினர் இசைக் கச்சேரி நடத்தினர். அப்போது, இசை அரங்கு ஒன்றில் நுழைந்த ஐந்து மர்ம நபர்கள் அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தவர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதல் காரணமாக, அந்நகரமே போர்க்களம் போல காட்சியளித்து வருகிறது. மேலும், இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் ரஷ்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் 87 சதவீதம் வாக்குகள் வித்தியாத்தில் விளாடிமின் புதின் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர், அந்நாட்டின் அதிபராக ஐந்தாவது முறையாகும். இந்நிலையில், தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு மிகப்பெரிய இசை கச்சேரி நடத்தும் அரங்கின் உள்ளே நுழைந்த சிலர் அங்கு திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். மேலும், வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், இசை விழாவில் பங்கேற்றிருந்த பலரும் கொல்லப்பட்டனர்.
மாஸ்கோ நகரின் மேற்கு பகுதியில் உள்ள 6,200 பேர் வரை பங்கேற்கக்கூடிய அளவில் மிகப்பெரிய இசை அரங்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 40 பேர் வரை இந்த தாக்குதலில் பலியாகினர். மேலும், சுமார் 145-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில், ஐந்து குழந்தைகள் உள்பட 115 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இரவு முழுவதும் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்ற நிலையில் நூற்றுக்கணக்கானோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதலை நடத்தியதற்காக இஸ்லாமிய அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெடிகுண்டு தாக்குதலினால் ஏற்பட்ட நெருப்பால், இசை அரங்கு முழுவதும் தீக்கிரையாகின. இதனையடுத்து அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளித்தது. தகவலறிந்து பல்வேறு பகுதிகளில் இருந்து சம்பவ இடத்திற்கு பல தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. உக்ரைன் போரின் நாட்டில் குறையாத நிலையில், இந்த தாக்குதல் நாட்டுப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக மாஸ்கோ நகரின் மேயர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாஸ்கோ மாநகர மேயர் சோபியான், குரோகஸ் சிட்டியின் மையப்பகுதியில் உள்ள அரங்கில் இந்த பயங்கரமான சம்பவம் நடந்திருக்கிறது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது அஞ்சலியையும், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, ரஷ்யா வெளியுறத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, இந்த பயங்கரமான தாக்குதல் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உலக நாடுகள் இந்த கொடூர சம்பவத்தை கண்டிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, 'மாஸ்கோவில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் உக்ரைனியர்கள் ஈடுபட்டதற்கான அறிகுறிகள் இல்லை' என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நீடிக்கும் நிலையில், உக்ரைனின் கிளர்ச்சி படையினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ரஷ்யாவில் நடந்த பயங்கரமான தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்கா தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அதோடு, இச்சம்பவத்தில் உக்ரைன் தொடர்பு ஏதுமில்லை எனவும் கூறியுள்ளது.
இதற்கிடையே, உக்ரைன் கூலிப்படை மூலம் இந்த பயங்கர தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் ரஷ்யா தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, இந்த பயங்கரமான வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொருப்பேற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் தலைமை ஆலோசகர் மைக்கைலோ போடோலியாக் வெளியிட்ட எக்ஸ் பதிவில், மாஸ்கோ பிராந்தியத்தின் க்ரோகஸ் நகரில் உள்ள அரங்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கும், குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் உக்ரைனுக்கு உறுதியாக எவ்விதமான தொடர்பும் இல்லை. உக்ரைன் - ரஷ்யா இடையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடப்பினும், பயங்கரவாத தாக்குதல் எந்தப் பிரச்னைக்கும் தீர்வைத் தருவதில்லை.
இதற்கிடையே தற்போது நடந்துவரும் போரில் ரஷ்யாவைப் போல, உக்ரைன் எப்போதும் பயங்கரவாதத் தாக்குதலை கையாண்டதில்லை' என மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரஷ்ய அதிபர் புதினுடன் திடீரென தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி! என்ன காரணம்?