புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வெஸ்ட் பாம் பீச் பகுதியில் டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான கோல்ஃப் கிளப் உள்ளது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ட்ரம்ப் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தபோது வேலிக்கு வெளியே இருந்து யாரோ துப்பாக்கியால் சுட முயற்சித்துள்ளனர்.
சுதாரித்துக்கொண்ட ரகசிய சேவை பாதுகாப்பு அதிகாரிகள் டொனால்ட் டிரம்ப்பை பாதுகாத்து அழைத்து சென்றுள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிடும் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் நடந்த பேரணியில் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடந்தது. இதில் ஒரு குண்டு அவரது காது பகுதியில் பாய்ந்து காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வரலாறு படைத்த ஸ்பேஸ்-எக்ஸ்: சாதனைப் பாதையின் 10 முக்கிய நிகழ்வுகள்!
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், ''டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பாக இருக்கிறார் என்பது நிம்மதி அளிக்கிறது. நாங்கள் ஏற்கனவே கூறியதுபோல, அமெரிக்காவில் அரசியல் வன்முறைகளுக்கு இடமே இல்லை. டிரம்ப்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தேவையான அனைத்து சாத்தியக்கூறுகளை ரகசிய சேவையில் இருப்பதை உறுதி செய்ய எனது குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய சட்ட அமலாக்கப் பிரிவு இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது'' என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்