புதுடெல்லி: போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்பிய மோடி, ஆகஸ்ட் 27 ஆம் தேதி, ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, தமது உக்ரைன் பயணம் குறித்து விவரித்த அவர், அரசியல் மற்றும் ராஜாங்கரீதியிலான வழிகளில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது" என்றும் புதினிடம் மோடி எடுத்துரைத்ததாக. வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "இந்தியாவை சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை பின்பற்றும் செல்வாக்கு மிக்க நாடாக நாங்கள் கருதுகிறோம். ரஷ்ய-இந்திய உறவுகளை ஒரு சிறப்புமிக்க மூலோபாய கூட்டாண்மையாகவும் நாங்கள் மதிக்கிறோம். பிற நாடுகளின் பங்களிப்புடன். உக்ரைன் போருக்கு அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியான தீர்வை சாத்தியமாக்கும் முயற்சியாகவே பிரதமர் மோடியின் சமீபத்திய உக்ரைன் பயணத்தை ரஷ்யா பார்க்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், "உக்ரைன் விவகாரம் தொடர்பாக இந்திய நண்பர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராத உள்ளது. இந்த விவகாரத்தில் ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து, இந்தியாவுடனான இருதரப்பு உயர்நிலை கூட்டங்களில் மீண்டும் மீண்டும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விஷயத்தில் ரஷ்யாவின் நிலைப்பாட்டை இந்தியா நன்கு அறியும்.
அரசியல் மற்றும் இராஜதந்திர முன்னெடுப்புகள் மூலம் ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கையின் இலக்குகளை அடைவதை ரஷ்யா ஒருபோதும் நிராகரிக்கவில்லை என்பதையும். இதனை நாங்கள் எங்கள் செயல்பாடுகளில் நிரூபித்து வருகிறோம் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறோம்" என்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் கஜன் நகரில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள நிலையில், அப்போது அவர் மீண்டும் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, பிரதமர் மோடியின் உக்ரைன் பயணத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்றிருந்தார். அதேசமயம், உக்ரைனில் அமைதி திரும்புவதை ரஷ்யா விரும்புவதாக தெரியவில்லை. எனவே, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்துவரும் கச்சா எண்ணெய்யின் அளவை குறைத்து கொள்ள வேண்டும் என்று உக்ரைன் அதிபர் விளாடிமீர் ஜெலன்ஸ்கி, பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'ரஷ்யா என்ன நினைத்ததோ அவர்களுக்கே அது திருப்பி விடப்பட்டது' - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி!