இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைந்த நிலையில், பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீக் லீ - நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 72 வயதான ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக 2வது முறை தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. வாக்கு எண்ணிக்கையின் போது சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு வேட்பாளர்கள் பல்வேறு இடங்களை கைப்பற்றிய போதும் முழு பெரும்பான்மை என்பது கிடைக்கவில்லை.
அதேபோல் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் கட்சியும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கணிசமான தொகுதிகளை கைப்பற்றின. இதையடுத்து தொடர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் -நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப் அறிவிக்கப்பட்டார். அதேபோல் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் சார்பில் ஒமர் அயூப் கான் பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்கினார். இந்நிலையில், பிரதமர் பதவிக்கான தேர்தல் இன்று (மார்ச்.3) நடைபெற்றது. மொத்தம் உள்ள 336 உறுப்பினர்களில் ஷெபாஸ் ஷெரீப் 201 வாக்குகளை பெற்றார்.
அதேநேரம், இம்ரான் கான் ஆதரவு ஒமர் அயூப் கான் 92 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதையடுத்து பாகிஸ்தானின் 33வது பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். திங்கட்கிழமை அதிபர் மாளிகையான ஐவான்-இ-சதரில் ( Aiwan-e-Sadr) நடைபெறும் விழாவில் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்க உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
அவரைத் தொடந்து சபாநாயகர், துணை சபாநாயகர் மற்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பொறுப்பேற்பார்கள் எனக் கூறப்பட்டு உள்ளது. திங்கட்கிழமை பதவியேற்பு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிபர் மாளிகையில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிபர் ஆரிப் அல்வி, பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்புக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு இம்ரான் கான் அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கவிழ்ந்த போது பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட ஷெபாஸ் ஷெரீப் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்து வந்தார். அதைத் தொடர்ந்து அவரது ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில், ஏறத்தாழ 20 மாதங்கள் பாகிஸ்தானில் காபந்து ஆட்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்பு? அதிபர் மாளிகையில் முன்னேற்பாடு தீவிரம்!