மாஸ்கோ (ரஷ்யா): சென்னை - விளாடிவாஸ்டாக் இடையே கிழக்கு கடல் வழித்தடத்தை அமைப்பதற்கான பணிகளை இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து மேற்கொண்டுள்ளன என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் மாஸ்கோவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அங்குள்ள இந்திய சமூகத்தினர் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர், " கடந்த 2015 ஆம் ஆண்டு மாஸ்கோவுக்கு நான் விஜயம் செய்தபோது, 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது என்று கூறியிருந்தேன். எனது கூற்றின்படியே, இநதியா அதிவேகமாக வளர்ந்து வருகிறது என்பதே பல்வேறு துறைகள் சார்ந்த வல்லுநர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.
ஒட்டுமொத்த உலகிற்கே நண்பனாக திகழும் இந்தியா, இந்த உலகிற்கு புதிய நம்பிக்கையை அளித்து வருகிறது. தமது திடமான வளர்ச்சியின் மூலம், உலகின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளதன் வாயிலாக, இந்த ஒட்டுமொத்த உலகுக்கே நிலையான வளர்ச்சி மற்றும் வளமை குறித்த நம்பிக்கையை இந்தியா அளித்துள்ளது.
ஒரு நாட்டுடன் அமைதி மற்றும் ராஜாங்கரீதியான பேச்சுவார்த்தைகளை இந்தியா நடத்தும்போது, அதனை ஒட்டுமொத்த உலகமே உற்று நோக்குகிறது. உலகின் எந்த நாட்டில் பேரிடர், நெருக்கடிகள் ஏற்பட்டாலும், அந்த பாதிப்புகளில் இருந்து மீள உதவிக்கரம் நீட்டும் முதல் நாடாக இந்தியா திகழ்கிறது" என்று மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
Thank the Indian community in Russia for their warm reception. Addressing a programme in Moscow. https://t.co/q3sPCCESbM
— Narendra Modi (@narendramodi) July 9, 2024
"இரண்டு ஆண்டுகளுக்கு முன், வடக்கு - தெற்கு போக்குவரத்து வழித்தடத்தின் மூலம், முதல் வணிகரீதியான சரக்குப் பெட்டகம் ரஷ்யா வந்தடைந்தது. தற்போது சென்னை - விளாடிவாஸ்டாக் இடையே கிழக்கு கடல்வழித் தடத்தை அமைப்பதற்கான பணியை இந்தியாவும் ரஷ்யாவும் மேற்கொண்டு வருகின்றன" என்றும் மோடி கூறினார்.
மேலும் இரு துணைத் தூதரகங்கள்: இந்தியா -ரஷ்யா இடையேயான வர்த்தக நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் இங்கு மேலும் இரண்டு துணைத் தூதரகங்களை திறக்க இந்தியா முடிவு செய்துள்ளது என்றும் இந்திய சமூகத்தினர் மத்தியில் பேசும்போது மோடி அறிவித்தார். கசான், யெகாடெரின்பர்க் ஆகிய இடங்களில் இப்புதிய துணைத் தூதரகங்கள் அமைக்கப்பட உள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "இந்தியாவின் வளர்ச்சியை கண்டு ஒட்டுமொத்த உலகமே வியப்பில் ஆழ்ந்துள்ளது" - மாஸ்கோவில் பிரதமர் மோடி பெருமிதம்!