டெல்லி : ரஷ்யா அதிபர் தேர்தலில் 87 சதவீத வாக்குகள் பெற்று 5வது முறையாக அதிபராக புதின் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
மேலும், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையில் போர் நிறுத்தத்திற்கான ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யா முன்வர வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்தியா - ரஷ்யா இடையிலான சிறப்பு மற்றும் பிரத்யேக கூட்டாளித்துவ செயல்பாடுகள் மற்றும் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "ரஷ்யாவின் அதிபராக திரு விளாடிமிர் புடின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
வரும் ஆண்டுகளில் இந்தியா –ரஷ்யா இடையே காலத்திற்கேற்ற வகையில், ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
வரும் ஆண்டுகளில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உத்தி சார்ந்த கூட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஒருங்கிணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி உள்ளோம்"என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : தெலங்கானாவில் 3வது தமிழர் ஆளுநராக பொறுப்பேற்பு! ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு!