இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு வழக்குகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அத்துல்லா தரார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "முன்னாள் ஆளும் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் பல்வேறு தேச விரோத செயல்களில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அக்கட்சி தடை செய்யப்படுவதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதில் தோஷகன்னா உள்ளிட்ட வழக்குகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட இம்ரான் கான் ராவல்பின்டியில் உள்ள அடியலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது கட்சிக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசவிரோத செயல்களில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சப் கட்சி ஈடுபட்டதற்கு போதிய ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாகவும், அதை வைத்தே அக்கட்சியின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அத்துல்லா தரார் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத திருமண வழக்கில் இம்ரான் கானுக்கு அண்மையில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நிவாரணம் வழங்கி இருந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் அரசு அக்கட்சியை தடை செய்து நடவடிக்கை எடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரயில் உணவுகளில் சுகாதார பிரச்சினையா? மத்திய ரயில்வே அதிரடி உத்தரவு! - Rail Madad app