ஜெருசலேம்: இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி நடத்திய தாக்குதலை புகழ்பெற்ற ஒன்று என்று ஹமாஸ் கூறியுள்ளது. அதே நேரத்தில் இந்த நாளில் ஏதேனும் தாக்குதல் நடக்குமோ என்ற அச்சத்தில் இஸ்ரேல் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.
கத்தாரில் உள்ள ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்த கலீல் அல் ஹாயா என்பவர் வெளியிட்டுள்ள காணொலி செய்தியில், "அக்டோபர் 7ஆம் தேதி எல்லை தாண்டிய புகழ்மிக்க நிகழ்வு எதிரியின் தவறான எண்ணத்தை உலுக்கியது. மேன்மை கொண்டவர்கள் மற்றும் திறன் கொண்டவர்கள் என்ற பிராந்திய ரீதியிலான, உலக அளவிலான நாடுகளை நம்ப வைத்துள்ளோம். எதிர்ப்பு, இரத்தம் மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றின் மூலம் புதிய வரலாற்றை நமது பாலஸ்தீன மக்கள் மற்றும் குறிப்பாக காசாவினர் ஏற்படுத்தியுள்ளனர்," என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் இஸ்ரேல்-காசா எல்லையில் மேலும் படைகளை இஸ்ரேல் ராணுவம் குவித்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " எல்லைப் பகுதியில் பதிலடி கொடுப்பதற்காக ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் பாதுகாப்பு படைகளுடன் இணைந்து தாக்குதலை எதிர் கொள்வதற்காக ராணுவத்தினர் முழு அளவில் தயார் நிலையில் உள்ளனர்," என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : காசாவில் மசூதி மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 18 பேர் பலி
காசவில் இருந்து நேற்று தெற்கு இஸ்ரேலை நோக்கி ராக்கெட்கள் ஏவப்பட்டன. இதில் சிலவற்றை இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி அழித்தது. நாடு முழுவதும் இஸ்ரேல் ராணுவம் உஷார் படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, ஈரானின் தலைவர் அயதுல்லா கமேனி. "தேவைப்பட்டால் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும்," என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, " நமது ராணுவம் முற்றிலும் மாற்றப்பட்ட யதார்த்தத்தை கொண்டுள்ளது. காசா, லெபனான் இரண்டு போர்களில் ஈடுபட்டுள்ளது. இரண்டிலும் வெற்றி பெறுவோம்," என்று தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி நடந்த தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் ராணுவம் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டதில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.