மாலே: சீன ஆதரவாளராக அறியப்படும் மாலத்தீவு நாட்டின் அதிபர் முகமது முய்சு, இந்திய எதிர்ப்பு அரசியல் கொள்கையை கொண்டவராகவும், மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தினரை வெளியேற்றுவதில் அதிதீவிரம் காட்டி வருகிறார். நவம்பரில் அதிபராக பதவியேற்ற முய்சு, மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ துருப்புக்கள் மார்ச் 15ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என கெடு விதித்து உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில், இன்று அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முய்சு, மாலத்தீவின் மூன்று விமான தளங்களில் இந்திய ராணுவ துருப்புகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. அதில் ஒரு விமான தளத்தில் உள்ள ராணுவ துருப்புகள் மார்ச 10ஆம் தேதிக்குள் வெளியேற்றப்படும். மேலும், 2 விமான தளங்களில் உள்ள இந்திய துருப்புகள் மே மாதம் 10ஆம் தேதிக்குள் வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு அரசு ஒப்பந்தத்தையும், நாட்டையும் அனுமதிக்க முடியாது என்றார். சமீபத்தில் சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த முகமது முய்சு, மாலத்தீவு சிறிய நாடாக இருக்கலாம், அதற்காக தங்களை ஆளும் உரிமையை வழங்க முடியாது என்றும், மிகப் பெரிய நாடுகளில்,மக்கள் உரிமைகளை பெறுவதற்காக தங்களது உறுப்புகளை தியாகம் செய்யும் நிலை இருக்கிறது என நாட்டின் பெயரை குறிப்பிடாமல் இந்தியாவை மறைமுகமாக சாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சுக்கு எதிராக உள்நாட்டில் எதிர்க்கட்சிகள் தொடர் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர். அதன் பிரதபலிப்பாக அண்மையில் மாலேவில் நடைபெற்ற மேயர் தேர்தலில் அதிபர் முகமது முய்சு படுதோல்வியை தழுவினர். இதற்முன் மாலே மேயராக இருந்த முகமது முய்சு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டு அதிபரானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட் பீரங்கி குண்டுகள் உருவாக்கி அசத்தல்.. ஐஐடி மெட்ராஸ் சாதனை!