டோக்கியோ: ஜப்பானின் அனுப்பிய லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிரக்கப்பட்டாலும், விரைவாக சக்தியை இழந்ததால் குறைந்தபட்ச வெற்றியை பெற்றதாக ஜப்பான் தெரிவித்து உள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத்தியது.
பல்வேறு கட்ட பயணத்திற்குப் பிறகு சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. லேண்டரில் இருந்த பிரக்யான் ரோவரும் வெற்றிகரமாக வெளியே வந்து ஆய்வை தொடங்கியது. சந்திரயான்-3 விண்கலம், இதுவரை யாரும் தொட்டிடாத நிலவின் தென்துருவத்தின் அருகில் தரையிறங்கி சாதனை படைத்தது.
இந்நிலையில் தற்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியாவைத் தொடர்ந்து 5 வது நாடாக நிலவில் கால் பதித்துள்ளது ஜப்பான். ஜப்பான் நாட்டின் விண்கலமான ஸ்லிம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியதன் மூலம் நிலவில் தரையிறங்கிய ஐந்தாவது நாடாக ஜப்பான் சாதனை படைத்துள்ளது.
நிலவை ஆய்வு செய்வதற்காக ஜப்பான் ஸ்லிம் என்ற விண்கலனை கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி விண்ணில் ஏவியது. இந்நிலையில் ஸ்லிம் விண்கலம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. முன்னதாக அனுப்பட்ட லேண்டர்கள் அனைத்தும் பல கிலோ மீட்டர்கள் பரப்பளவில் நிலைநிறுத்தப்பட்டது.
ஆனால் இந்த லேண்டர் நிலவின் மேற்பரப்பில் 100 மீட்டர் பரப்புக்குள் துள்ளியமாக தரையிறக்கும்படி திட்டமிடப்பட்டது. இந்த லேண்டர் LEV-1 மற்றும் LEV-2 என்ற இரண்டு ரோவர்களை தரையிரக்கியுள்ளது. இந்த லேண்டர் வெற்றிகரமாக தரையிரக்கப்பட்டாலும், விரைவாக சக்தியை இழந்ததால் இந்த மிஷன் குறைந்தபட்ச வெற்றியை பெற்றுள்ளதாக ஜப்பான் கூறியுள்ளது.
இந்நிலையில் தற்போது லேண்டரிலிருந்து ஒரு சிக்னல் கிடைத்து வருவதாகவும், அது எதிர்பார்த்தபடி தொடர்பு கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது, லேண்டர் வரையறுக்கப்பட்ட பேட்டரி சக்தியில் இயங்குகிறது. இது சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து லேண்டரால் பெறப்பட்ட அனைத்து அறிவியல் தரவுகளையும் சேகரிக்க குழு செயல்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நிலவில் தடம் பதிக்குமா ஜப்பான்? லேண்டரின் நிலை என்ன?