குவைத்: குவைத்தின் மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்த நிலையில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் அடுக்குமாடி குடியிருப்பின் பல்வேறு பகுதிகளில் இருந்ததாகவும், வீடுகளிலும் விரைவாக தீப்பிடிக்க பொருட்கள் இருந்ததே பெரிய அளவில் தீ விபத்து ஏற்படக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களால் ஏற்பட்ட கரும் புகை காரணமாக பொது மக்கள் குடியிருப்பை விட்டு வெளியே வரமுடியாமல் போனது, அடுக்குமாடியின் மேல் பரப்புக்கு செல்ல முயன்ற போது அங்கிருந்த கதவுகள் மூடப்பட்டு இருந்ததால் அங்கேயும் செல்ல முடியாமல் பலர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழ்ந்ததாக குவைத் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து அடுக்குமாடியின் குடியிருப்பின் உரிமையாளர் மற்றும் கட்டடத்தில் பணியாற்றி வந்த எகிப்தை சேர்ந்த காவலாளி ஆகியோரை கைது செய்து மறு உத்தரவு வரும் வரை சிறையில் அடைக்கவும் குவைத் துணை பிரதமர் ஷேக் ஃபஹத் அல் யூசப் அல் சபா உத்தரவிட்டுள்ளார்.
குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து பேரிழப்பு என்றும் அதை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், முறையற்ற வகையில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
குவைத் குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் போது அங்குள்ள கள நிலவரம் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
தொடர்ந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தொழிலாளர்கள் குறித்து அறிய உதவி எண்ணாக 965-65505246 என்ற தொலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளது.
குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், "தீ விபத்தில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு இந்திய தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நேரில் சென்று அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள இந்தியர்களை நேரில் சந்தித்ததாகவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தூதரகம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 41 பேர் பலி! தமிழர்கள் உயிரிழப்பு என அதிர்ச்சித் தகவல்! - Kuwait Building Fire