பிஷ்கேக்: கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் கிர்கிஸ் மற்றும் எகிப்திய மாணவர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. கடந்த மே 13 அன்று இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், பிஷ்கேக் மருத்துவ பல்கலைக்கழகத்தில் படிக்கும் சர்வதேச மாணவர்கள் மீதும் வன்முறை நடப்பதாக தகவல் வெளியானது. இதனால், பிஷ்கேக்கில் உள்ள இந்திய மாணவர்களை வீட்டிற்குள் இருக்குமாறு கிர்கிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் கடந்த சனிக்கிழமை அறிவுறுத்தியது.
முன்னதாக, இதுகுறித்து இந்திய தூதரகம் தமது எக்ஸ் பதிவில், "இந்திய மாணவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். தற்போது நிலைமை அமைதியாக உள்ளது. இருப்பினும், மாணவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் தூதரகத்தை தொடர்பு கொள்ளவும்" என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், கிர்கிஸ்தானில் தற்போது நிலைமை அமைதியாக உள்ளது என்று அங்குள்ள இந்திய தூதரகம் கூறியிருக்கும் நிலையில், பிஷ்கேக் மருத்துவப் பல்கலைக்கழகங்களின் சில விடுதிகளில் தங்கியிருக்கும் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவர்கள் வன்முறைக்கு மத்தியில் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவர்கள் தெரிவிக்கும் போது, ''சம்பவம் நடந்ததிலிருந்து, பாகிஸ்தான் தூதரகமோ அல்லது உள்ளூர் அதிகாரிகளோ தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. மருத்துவமனைகளில் தங்களுக்கு முறையான மருத்துவ உதவி கிடைப்பதில்லை. தங்களது பாதுகாப்பு குறித்து கவலையாக உள்ளது ” என மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
ஆனால், இதுகுறித்து விளக்கம் அளித்த பாகிஸ்தான் தூதரகம், ''இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் மாணவர்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளனர் என்றும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கிர்கிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கிர்கிஸ்தானில் 700 இந்திய மருத்துவ மாணவர்கள் தவிப்பு!