ஹைதராபாத்: அரசியல்வாதிகள் மட்டுமல்ல கல்யாணம் முதல் காது குத்து வரை பேனர் வைப்பது நம்ம ஊருக்கு ஒன்றும் புதிது அல்ல. ஆனால் அமெரிக்காவின் நியூயார்க்கில் இருக்கும் டைம்ஸ் சதுக்கத்தில் விளம்பரம் செய்வது மதிப்பிற்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர்கள் தேர்தல் தொடங்கி, புதிதாக சந்தைக்கு அறிமுகமாகும் பொருட்கள் வரை இங்கே விளம்பரம் செய்யப்படுகின்றன.
இப்படிப்பட்ட டைம்ஸ் சதுக்கத்தில் நீங்களும் நானும் நினைத்தால் கூட விளம்பரம் செய்யலாம். இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. உங்கள் ஊர் பொருட்காட்சித் திடலில் எப்படி கட்டணம் செலுத்தி விளம்பரம் செய்ய முடியுமோ அது போலத்தான் சர்வதேச வர்த்தக நகரான நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்திலும் விளம்பரம் செய்யலாம். வித்தியாசம் என்னவென்றால் கட்டண தொகையும், விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகளும் மாறலாம்.
டைம்ஸ் சதுக்கத்தில் எங்கு திரும்பினாலும் டிஜிட்டல் திரைகள் மின்னுகின்றன. இதில் உங்கள் விருப்பத்திற்கும் பொருளாதார வசதிக்கும் ஏற்ப எங்கு வேண்டுமானாலும் விளம்பரம் செய்து கொள்ளலாம். டைம்ஸ் சதுக்கத்திற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரம் செய்வதற்கான வசதிகள் உள்ளன (https://www.timessquarenyc.org).
இதில் பல விதமான விளம்பர சுவர்களுக்கு பல விதமான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் கண்ணில் எளிதாக படக்கூடிய அளவில் இருக்கும் திரைகளுக்கு கட்டணம் ஒப்பீட்டளவில் அதிகம்.
எளிய விளக்கத்திற்காக நாம் (https://timessquarebillboard.com) என்ற இணையதளத்தை அணுகினோம். நமக்கு விளம்பரம் செய்ய வேண்டிய அடிப்படை தகவல்கள் எவ்வளவு நேரம் விளம்பரம் வரவேண்டும் என்ற தகவல்களை உள்ளிட்டால் பணம் செலுத்துவதற்கான விண்டோ கிடைக்கும்.
இந்த இணையதளத்தில் உள்ள தகவலின் படி ஒரு நாளில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் 15 வினாடிகள் விளம்பரம் செய்ய 150 டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 13 ஆயிரம் ரூபாய் செலவாகும். இது அடிப்படைத் தொகை என்பதால், பேனர்களின் வகையைப் பொருத்து, அதன் பார்வை திறன் (Visibility) எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொருத்து இதற்கான கட்டணம் உயரும். அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 44 லட்ச ரூபாய் வரையிலும் கூட செலவிட்டு விளம்பரம் செய்யலாம்.
இதையும் படிங்க: என்னாதிது.. உலகின் 2வது மிகப்பெரிய வைரம் கண்டெடுப்பு.. எவ்வளவு விலைமதிப்பு தெரியுமா?